இலவசத்திற்குக் கையேந்தும் நிலையை மாற்றுவேன் – சீமான் உறுதி

நாம் தமிழர் கட்சி சார்பில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரகுபதி பீமன், தீனு, ரா.கார்த்திக் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று குன்னூரில் பரப்புரை செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது….

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இலவசம் என்ற பெயரில் உரிமைத் தொகை எனவும், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களைக் கொடுப்பதாகவும் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றன. நாங்கள் வெற்றி பெற்றால் கல்வி மற்றும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து, அனைவருக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்வோம். எனவே, நாதக வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்யவேண்டும்.

நான் ஒருவன்தான் சொல்கிறேன் இலவசம் தரமாட்டேன்.இலவசத்திற்குக் கையேந்த வைக்கும் நிலையில் உங்களை வைக்கமாட்டேன். நான் வேலை இல்லை என்ற சொல்லை ஒழிப்பேன்.வறுமை,ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் ஒழிப்பேன்.பசி என்ற சொல்லே இல்லாமல் ஒழிப்பேன்.நடிப்பவன்தான் நன்றாக நாடாளுவான் என்று இன்று எண்ணிக் கொண்டிருக்கிறாய்.

நடிப்பவன் கடைசிவரை நடித்துக் கொண்டுதான் இருப்பான்.மக்களுக்கான சேவை என்பது செத்து விழுகிறது. ஜனநாயகம் செத்து விழுந்து கேடுகெட்ட பணநாயகம் பிறந்துவிடுகிறது.இதனால் மக்களின் நலன் என்பதோ மக்களின் சேவை என்பதோ கேள்விக்குறியாகி விடுகிறது.வாக்குக்குக் காசு கொடுக்கும்பொழுது அவர்களின் கையைப் பிடித்துக் கேளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்…

தவெக தலைவர் விஜய்யின் திரைப்பட பிரச்சினையை நாங்கள்தான் பேசிவருகிறோம்.பாஜக பாசிசம் என்றார்கள். இப்போது பாயாசம் ஆகிவிட்டதா? தற்போது வரை பாஜக பற்றி எதுவும் பேசாமல் விஜய் மவுனம் சாதிக்கிறார். இறந்த 41 பேருக்கு ஆறுதலாக ஒரு அறிக்கை கொடுக்க நேரமில்லை.ஆனால்,உங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கிறீர்கள்.ஒரு தலைவனுக்கே பாதுகாப்பு வேண்டும் என்றால்,மக்களுக்கு இவரால் எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும்? என்றார்.

Leave a Response