
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது சொந்தத் தொகுதியான காரைக்குடியில் இம்முறை களமிறங்கியுள்ளார்.
இந்தச் சூழலில், காரைக்குடி தொகுதியில் சீமான் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கல் செய்தபோது சீமானுடன் அவருடைய தாய் மற்றும் மனைவி கயல்விழி ஆகியோர் உடனிருந்தனர்.
காரைக்குடி தொகுதியில் நாதக சார்பில் சீமான், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக சார்பில் தேர்போகி பாண்டி, தவெக சார்பில் பிரபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.காங்கிரசு வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான்….
ஆட்சிக்கு வந்தால் ரூ.2 ஆயிரம், ரூ.2500, ரூ.3000 தருவதாக தலைவர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர். படித்துவிட்டு வேலையில்லாதவனுக்கு வேலை கொடுப்பதற்குப் பதிலாக, ரூ.4 ஆயிரம் தருவதாகச் சொல்பவர் எப்படி நல்ல தலைவராக இருக்கமுடியும்?
டாஸ்மாக் கடையை மூடுவதாக ஒருவருமே வாக்குறுதி அளிக்கவில்லையே? பத்தரை இலட்சம் கோடி ரூபாய் கடன் இப்போதே உள்ளது. இப்போது நீங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் பல இலட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவீர்கள். கடன் வாங்கி நிறைவேற்றிய எந்தத் திட்டமாவது தரமாக உள்ளதா?.
ஒரு இனத்தின் மகனாக,இலவசங்கள் கொடுப்பதை தன்மானத்துக்கு எதிரானதாக நினைக்கிறேன்.நேர்மையான நல்லாட்சியைக் கொடுப்பதாகச் சொல்பவர்கள் ஏன் இலவசங்களைக் கொடுக்கவேண்டும்?
மலை,மணல்,இயற்கை வளம் ஆகிய எல்லாவற்றையும் சுரண்டிவிட்டார்கள்,எதிர்காலம் என்னவாகும்? கள்ளச்சாராயம் குடித்து இறந்தவனுக்கு ரூ.10 இலட்சம் கொடுத்து ஊக்கப்படுத்திய அரசுதானே இது.
இவர்கள் கொடுக்கும் இலவசத்துக்கு ஏன் கையேந்த வேண்டும்? நம் மானமும்,வீரமும் மரத்துப்போய்விட்டதா?. அவர்கள் கைக்காசில் இருந்தா இலவசம் தருகிறார்கள்.அனைத்து வரிகளையும்,விலைவாசிகளையும் உயர்த்திதான் இலவசம் கொடுக்கிறார்கள்.அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் தற்சார்பு நிலையைக் கூட மக்களுக்கு ஏற்படுத்த முடியவில்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.


