
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில்,அரசியல்களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.அந்தஅளவுக்கு தேர்தல் பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. வலுவான கூட்டணியை அமைத்துள்ள திமுக, தற்போது தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, காங்கிரசுடனான பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது. பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. முதலில் காங்கிரசு 41 தொகுதிகளைக் கேட்டது. ஆனால் திமுக புதிதாக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம், தேமுதிக ஆகிய கட்சிகளுக்கும் கவுரவமான முறையில் இடங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டியுள்ளதால் 25 தொகுதிகள்தான் வழங்கமுடியும் எனத் திட்டவட்டமாகக் கூறியதாகத் தகவல் வெளியானது.காங்கிரசுக் கட்சி இதனை ஏற்கமறுத்து மீண்டும் கிரிஷ் சோடங்கரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
காங்கிரசுக் கட்சியின் கோரிக்கையை ஏற்பதற்கு திமுக மறுத்ததால் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தது. திமுக – காங்கிரசு கூட்டணியில் தொகுதி எண்ணிக்கை குறித்து இருதரப்பும் வெளிப்படையாக எதையும் கூறாமல் இருந்த நிலையில், இறுதியாக 25 தொகுதிகள் வழங்க திமுக முன்வந்ததாகவும், அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் காங்கிரசு மூத்ததலைவர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் புதியகட்சிகள் வந்துள்ளதால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இல்லையென கண்டிப்பான முறையில் தெரிவித்தது.மேலும் ஒரேயொரு மாநிலங்களவை உறுப்பினர் மட்டுமே வழங்கமுடியும் எனவும் கூறிவிட்டது. இதனால், பேச்சுவார்த்தை சுமுகமாக இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்தச்சூழலில் கூட்டணி முடிவை காங்கிரசிடமே திமுக விட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.இதற்கிடையே, மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.இதனால் தொகுதிப் பங்கீடு குறித்து நேற்று முன்தினம் இரவுக்குள் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டது.
இதனால், கூட்டணி குறித்து டெல்லியில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, இராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் அன்றைய தினம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது,கூட்டணி தொடர்பாக காங்கிரசு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் யாருடன் கூட்டணி வைக்கலாம் என காணொலி மூலம் கருத்து கேட்டார்.அதற்கு திமுக கூட்டணிதான் நல்லது என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.ஒரு சில காங்கிரசு நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமமானது எனவும்,பாஜகவைப்பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்காத விஜய்யுடன் எப்படி காங்கிரசு கூட்டணி வைக்கமுடியும் என கேள்வி எழுப்பினர்.
இதனால் தமிழ்நாடு காங்கிரசில் கூட்டணி விவாதம் புயலைக் கிளப்பியது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் திமுக ஆதரவு கருத்தைத் தெரிவித்ததால், திமுக தலைமையை சமாதானம் செய்யும் வகையில் இறுதிகட்ட முயற்சியாக காங்கிரசு மூத்ததலைவர் ப.சிதம்பரத்தை சோனியாகாந்தி களத்தில் இறக்கினார்.
அந்த வகையில், முதலமைச்சருடன் ஒருமணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரசுக் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வழங்க திமுக சம்மதம் தெரிவித்தது.ஆனால் 35 தொகுதிக்கு குறையக்கூடாது என இராகுல் காந்தி உறுதியாக இருந்துள்ளார்.
திமுக கூட்டணி தொடரவேண்டும் என்று காங்கிரசு மூத்ததலைவர்கள் விரும்பும் நிலையில்,நேற்று முன்தினம் இரவு மீண்டும் திமுக- காங்கிரசு கட்சியிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம் ஆகியோர் சோனியாகாந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தநிலையில் 28 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கமுடியும் என திட்டவட்டமாக திமுக தெரிவித்ததை எடுத்துக் கூறினர்.மேலும் முதலமைச்சரின் வருத்தத்தையும் சோனியாகாந்தியிடம் ப.சிதம்பரம் இரவோடு இரவாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.தொகுதி முக்கியமல்ல கூட்டணியும், நட்பும்தான் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, டெல்லியில் உள்ள காங்கிரசு தலைமை ஒப்புக்கொண்டது.
அதேநேரம் 30 இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று போராடியது காங்கிரசு.இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் தனியாக ஆலோசனை நடத்தினர்.
இதன்பிறகு, சோனியா மற்றும் இராகுலை தனித்தனியாகத் தொடர்பு கொண்டு ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். அதன்பிறகு கார்க்கேவிடம் பேசிய சிதம்பரம், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள சிக்கலைப் பற்றி விளக்கியுள்ளார். இறுதியாக கனிமொழியும், சோனியா தரப்பைத் தொடர்பு கொண்டு, “முதலமைச்சர் 28 தொகுதிகளை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார்.நீங்களும் இறங்கிவந்தால் கூட்டணி ஒப்பந்தம் இறுதியாகிவிடும். வியாழன் அன்று மாநிலங்களவைக்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிடலாம்’’ என்று சொல்லியுள்ளார்.
இதைத்தொடர்ந்து காங்கிரசில் அமைக்கப்பட்டுள்ள கிரிஷ் சோடங்கர் தலைமையிலான ஐவர் குழு,சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை பேச்சுவார்த்தைக்கு வரும் என தகவல் வெளியானது.
இதற்காக நேற்று மாலை 4.30 மணிக்கு கிரிஷ் சோடங்கர் சென்னை விமானநிலையம் வந்தார்.அவரை செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.அங்கிருந்து நேராக அறிவாலயம் புறப்படத் தயாராக இருந்த நிலையில்,மேலிடத்தில் இருந்து இன்னும் உத்தரவு வரவில்லை என்று என்று கிரிஷ் சோடங்கர் தாமதப்படுத்தி கொண்டே இருந்தார். இதனால் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதற்கிடையே,சென்னை விமானநிலையத்தில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திமுக காங்கிரசு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை,சுமுகமாகச் செல்கிறது.சென்னை விமான நிலையத்தில் நாங்கள் ஆலோசனை எதுவும் நடத்தவில்லை.நோன்புதான் திறந்தோம்.எந்த இழுபறியும் இல்லை. டெல்லி காங்கிரசு தலைமை முறையான அறிக்கையை எங்களுக்கு அனுப்பும்.அதனை நாங்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்வோம்’’ என்றார்.
இதையடுத்து, தி.நகரில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு காங்கிரசுக் கட்சியினர் வந்து திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் காங்கிரசார் இருந்தனர். இதையடுத்து இரவு 7.30 மணி அளவில் புறப்பட்டு அண்ணா அறிவாலயத்துக்கு காங்கிரசுக் குழுவினர் சென்றனர்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரும் அங்கு வந்தனர்.பின்னர் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு இறுதியானது.இதையடுத்து, திமுக-காங்கிரசு இடையே நேற்றிரவு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் திமுக தரப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், காங்கிரசு தரப்பில் செல்வப்பெருந்தகையும் கையெழுத்திட்டனர்.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தொடர்ந்து 4 ஆவது முறையாக திமுக-காங்கிரசு கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தில், ‘‘நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரசு தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென்றும், மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசுக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது’’ என்று கூறப்பட்டுள்ளது.
கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு தமிழ்நாடு காங்கிரசு தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில்,28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் காங்கிரசுக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.மாநிலங்களவை வேட்பாளர் யார் என்பதை அகிலஇந்திய தலைமை அறிவிக்கும். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்தத் தாமதமும் இல்லை.கூட்டணி சரியான சமயத்தில் அமைந்திருக்கிறது. நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம் என்றார்.
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரசு 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


