அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டிலிருந்து ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவேண்டும்.அதற்கான தேர்தல் மார்ச் 16 நடைபெறவுள்ளது.

இவற்றில் 4 இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெறும் நிலை உள்ளது.

இதனால்,அதிமுக ஒரு தொகுதியிலும், பாமக ஒரு தொகுதியிலும் போட்டியிடும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி மார்ச் 16 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இதில்,அன்புமணி அல்லது அவரது மனைவி சவுமியா ஆகியோரில் ஒருவர் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு,அதிமுக மாநிலங்களவை வேட்பாளராக தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி மார்ச் 16 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர்,கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தம்பிதுரை, 1947 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தகம்பள்ளி கிராமத்தில் பிறந்தவர்.இந்தி எதிர்ப்புப் போராட்டாத்தில் பங்கேற்றார். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது அக்கட்சியில் சேர்ந்தார். 1977 இல் ஈரோடு சட்டமன்ற உறுப்பினராகவும், 1984, 1989, 1998 ஆகிய ஆண்டுகளில் கரூரில் இருந்தும் 2009, 2014 ஆம் ஆண்டுகளில் தர்மபுரியில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

2001 ஆம் ஆண்டு பர்கூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு கல்வித்துறை அமைச்சராக இருந்தார். 1998 முதல் 1999 ஆம் ஆண்டுவரை சட்டம் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். 1985 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை மக்களவை துணைத்தலைவராக இருந்தார்.

2019 ஆம் ஆண்டு கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு காங்கிரசு வேட்பாளர் ஜோதிமணியிடம் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். தற்போது 2 ஆவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response