
கரூர் வேலுசாமிபுரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் விஜய் தனது சமூகவலைதளப் பக்கத்தில் காணொலியைப் பகிர்ந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது….
கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையைச் சொல்லும் போது, கடவுளே நேரில் வந்து இறங்கி உண்மையைச் சொல்வது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்.
எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம். அதைத் தவிர நாங்கள் வேறேதும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் தோழர்கள், நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் போட்டு கைது செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தோரையும் கைது செய்கிறார்கள்.
சிஎம் சார் உங்களுக்கு என்னை ஏதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். இல்லாவிட்டால் ஆஃபீஸில் இருப்பேன். நண்பர்களே, தோழர்களே நம் அரசியல் பயணம் இன்னும் வலுவாக இருக்கும். இன்னும் தைரியத்தோடு தொடரும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விஜய்யின் இந்தக் கருத்தால் மக்கள் அதிர்ந்தனர்.அரசியல் தலைவர்கள் திடுக்கிட்டனர்.ஒரு பெருந்துயரம் தன்னால் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து வருந்தாமல் அதை வைத்து அரசியல் செய்ய நினைத்து ஆளுங்கட்சி மீது பழி போட்டது யாரும் எதிர்பாராதது.
இதனால் நாடெங்கும் அவருக்குக் கடும் எதிர்ப்புகள்.இவ்வளவு நாட்கள் இவரை ஆதரித்ததற்காக வருந்துகிறோம் என்று ஏராளமான பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் திரைப்பட இயக்குநர் லெனின்பாரதி, இதுகுறித்துக் கூறியிருப்பதாவது….
தான் ஒரு அரசியலற்ற… அறமற்ற.. பொறுப்பற்ற.. தலைமைப் பண்பற்ற… வெற்று சினிமா ஜிகினா மட்டுமே என்பதை தெள்ளத்தெளிவாக சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்து இருக்கிறார்
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


