
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் கடந்த 5 ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்குப் பிறகு பெரிதாக வெடித்தது. அதைத்தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 10 பேரின் கட்சிப் பதவி பறித்ததுடன் மேலும் 2 பேரை எடப்பாடி பழனிச்சாமி நீக்கம் செய்தார். இது கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, கடந்த 6 நாட்களாக ஓபிஎஸ் அணியினர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்குச் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால் மீண்டும் கூட்டணியில் இணைவதாக டிடிவி தினகரன் அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த இரு நாட்களாக டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் செங்கோட்டையன் வீட்டுக்குச் செல்லத் தொடங்கினர்.
நேற்று அமமுக துணை பொதுச்செயலாளரும், மேற்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை சண்முகவேல் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி மேயர் விசாலாட்சி, முன்னாள் பாமஉ சுகுமார், முன்னாள் சமஉ ரோகிணி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் 200 க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரண்டு சென்று செங்கோட்டையனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அதே போன்று நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் ஓபிஎஸ் அணியினர் 200 க்கும் மேற்பட்டோர் செங்கோட்டையனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதுவரை ஓபிஎஸ் அணியினர் மட்டுமே அதிகளவில் வந்த நிலையில் தற்போது டிடிவி தினகரன் அணியினரும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்ட ஓபிஎஸ் அணி உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள், கோபியில் உள்ள கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஜெ.பேரவை மாநில இணைச்செயலாளர் தண்டபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில்….
குறுக்கு வழியில் வந்த எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இணைவதைத் தடுத்து வருகிறார். சுயநலத்திற்காக அதிமுகவை ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான பணியில் ஈடுபட்டு இருக்கிறார். செங்கோட்டையன் விரைவில் ஒற்றுமை ஏற்படும் பொறுமையாக காத்திருங்கள் எனச் சொல்லியிருக்கிறார். அவர் ஏதாவது செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.
நாள்தோறும் செங்கோட்டையனுக்குப் பெருகும் ஆதரவு எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது என்று அக்கட்சியினர் கூறுகிறார்கள்.


