பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை திடீர் இரத்து – காரணம் இதுதான்?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன.அந்தத் தேர்தலைச் சந்திக்கும் வகையில் தேர்தல் பணிகளை ஆளுங்கட்சியான திமுக முடுக்கி விட்டுள்ளது. இதே போல அதிமுக, நாம் தமிழர் கட்சி, விஜய் கட்சி ஆகியனவும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் நெருங்கி வருவதால் வட இந்திய தலைவர்கள் தமிழ்நாட்டை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

ஜூலை மாதம் 26 ஆம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடந்த ஆடி திருவாதிரை, முப்பெரும் விழா​வில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்நிலையில் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வர உள்ளார் என்று கூறப்பட்டது. சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளுக்குச் செல்லும் பிரதமர் அங்கு சாமி தரிசனம் செய்வார் என்றும் தகவல் வெளியானது.தரிசனத்தை முடித்து ​விட்​டு நடராஜர் கோயிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நேரலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாகவும் கூறப்​பட்டது.

இந்த நிலையில், வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. மாற்றுப் பணி மற்றும் முக்கிய அலுவல்கள் காரணமாக இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அக்டோபர் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வர திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக பாஜக கூட்டணி அமைந்தாலும் அதிமுக ஒன்றுபடாமல் இருப்பது பலவீனம் என்பதால் அந்த முயற்சியிலும் பாஜக ஈடுபட்டுவருகிறது.அதில் முன்னேற்றம் இல்லாததால் மோடியின் வருகை இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response