
பீகார் மாநிலத்தில் இவ்வாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.
பீகார் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் முன்னதாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது,குடியுரிமையைத் தீர்மானிக்கும் நபராக தேர்தல் ஆணையம் இருக்கமுடியாது என்றும், அதேபோன்று வாக்காளர்களை அச்சத்தில் நிறுத்தியுள்ள பீகார் வரைவு வாக்காளர் பட்டியலுக்குத் தடை விதிக்க வேண்டும் என வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
அவற்றைப் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 இலட்சம் பேரின் விவரங்களை நான்கு நாட்களில் வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 14 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.அந்த உத்தரவின் அடிப்படையில் நீக்கப்பட்டவர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா ஜோஷி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,பீகாரில் 65 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவின்படி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றி உள்ளோம்.குறிப்பாக விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டது மட்டுமில்லாமல், பஞ்சாயத்து அலுவலகங்கள், காவல்நிலையங்கள் ஆகிய இடங்களிலும் ஒட்டியுள்ளோம். மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தவறாக நீக்கம் செய்யப்பட்டவர்கள், கேட்கப்பட்ட துணை ஆவணங்களை இணைத்து புதிய விண்ணப்பத்துடன் தாக்கல் செய்யலாம். இந்த விவகாரம் தொடர்பாக நாள் ஒன்றுக்கு சுமார் 10 சதவீதம் மக்களை தினமும் சந்திக்கிறோம். இதனை பதிவு செய்யப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆட்சேபனை மற்றும் கோரிக்கைகளையும் தாக்கல் செய்ய முடியுமா?. இல்லை ஆட்சேபனை தெரிவிக்கும் உரிமை தனி நபருக்கு மட்டும் தானா? என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆணையத்தின் வழக்கறிஞர்,அரசியல் கட்சிகள் முன்வந்து ஏதேனும் காரணம் தெரிவித்தால் நாங்கள் அதுகுறித்து விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறோம். யாருக்கும் வாய்ப்பு கொடுக்காமல் வரைவு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படவில்லை.ஏராளமானோர் ஆவணங்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். தயவுசெய்து காத்திருந்து பாருங்கள். தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை நீங்களே மீண்டும் பதிவிடுவீர்கள் என்று தெரிவித்தார்.
இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன் மற்றும் கோபால் சங்கர் நாராயணன், குறுகிய காலத்தில் சில மாதிரிகளை வழங்கியுள்ளோம். சுமார் 85,000 பேர் முன்வந்துள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள். பலர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாநிலத்திற்கு வெளியே வேலை செய்பவர்கள் ஆவர்.மேலும் பீகாரின் பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதில் சிக்கியும் உள்ளனர். சிலர் அவ்வப்போது வேலைக்காக வெளியே செல்வதால், விலக்கப்பட்ட அனைவரும் தங்கள் கோரிக்கைகளை தாக்கல் செய்ய முடியாமல் போகலாம். படிவம் 6 இன் கீழ் கோரிக்கைகளை தாக்கல் செய்வதுதான் முக்கிய பிரச்னையாக உள்ளது. ஆதார் அனுமதிக்கப்படுகிறது, ஆனால் மீண்டும் தேர்தல் ஆணையம் முன்னதாக அறிவிக்கப்பட்ட 11 ஆவணங்களை தவிர்த்து சில கூடுதல் ஆவணங்களையும் கேட்கின்றனர். அப்படி கொடுக்கப்படும் ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படுவது இல்லை.இதுகுறித்த புகார்களை நாங்கள் தற்போது இணைத்துள்ளோம். ஆன்லைனில் விண்ணப்பம் செய்யட்டும், ஆதார் வழங்கட்டும் என்பது தெளிவுபடுத்தலாக இருக்கலாம். ஆனால் மற்ற ஆவணங்கள் அதிகபட்ச புழக்கம் இல்லை. ஆதாரை கொடுத்தாலும் நிராகரிக்கிறார்கள். குறிப்பாக மெட்ரிகுலேஷன் சான்றிதழ் கேட்கின்றனர். அது பீகார் மாநிலம் முழுவதும் 40 சதவீதம் பேரிடம் மட்டுமே மெட்ரிகுலேஷன் சான்றிதழ் உள்ளது என்று தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள், உள்ளூர் நபர்கள் மற்றும் சிறிய கிராமங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் குறைந்தபட்சம் இந்த தகவலை தெரிவித்திருக்க வேண்டும். குறிப்பாக யார் புலம்பெயர்ந்தவர் போன்ற விவரங்களை கூறியிருக்கலாம். குறிப்பாக அரசியல் கட்சிகளின் செயலற்றத்தன்மை உச்ச நீதிமன்றத்தை கவலையடைய செய்துள்ளது. இதில் பூத் ஏஜென்டுகள் என்ன செய்கிறார்கள்? அரசியல் கட்சியினருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே ஏன் இடைவெளி ஏற்பட்டது என்று கேள்வியெழுப்பினர்.
இதையடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பான விவகாரத்தில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும். இதற்காக நீக்கப்பட்டவர்கள் ஆதார் கார்டை வசிப்பிட ஆவணமாகக் கொடுக்கலாம். இதில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியதன் அடிப்படையில் இந்த அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதேபோன்று தேர்தல் ஆணையம் கேட்கும் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றையும் கொடுத்து ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் வாக்காளர்களுக்கு உதவி செய்யவேண்டும். அரசியல் கட்சிகள் தங்களது பூத் ஏஜெண்டுகளுக்கு பிரத்யேக உத்தரவை பிறப்பித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரு நபர் தாமாக அல்லது பூத் ஏஜெண்டுகளின் உதவியுடனோ ஆன்லைனில் விண்ணப்பிக்க உரிமை உண்டு. எனவே விண்ணப்பங்களை நேரில் வழங்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
அனைத்து அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள், வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாத சுமார் 65 இலட்சம் நபர்களில் இறந்தவர்கள் அல்லது புலம்பெயர்ந்தவர்களைத் தவிர, பிற விடுபட்ட நபர்கள் தொடர்பான ஆட்சேபனைகளை செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் மூலம் வாக்காளர்கள் பெயரைச் சரி பார்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டால் குறைந்தபட்சம் 16 இலட்சம் வாக்காளர்களை ஒருநாளில் சரிபார்க்க முடியும்.
அப்படி இருக்கையில் இந்த நடைமுறையை முடிக்க காலதாமதம் ஏற்படாது . குறிப்பாக படிவங்கள் சமர்ப்பிக்கப்படும் இடங்களில், பூத் ஏஜெண்டுகளுக்கு உரிய ஒப்புதல் ரசீது வழங்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,இந்த வழக்கின் அடுத்த விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு,ஒன்றியத்தை ஆளும் பாஜகவின் அரசியல் சூழ்ச்சிக்குப் பின்னடைவு என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


