மாடு மேய்க்கும் போராட்டம் ஏன்? – சீமான் விளக்கம்

தேனி மாவட்டம் போடியில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக வனப்பகுதிகளில் மலை மாடுகள் மேய்க்கும் போராட்டம் நடத்தப்போவதாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று அவரது தலைமையில், போடி அடகுபாறை பகுதியில் மலைமாடுகள் மேய்க்கும் போராட்டம் நடைபெற்றது.இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுமாடுகள் மற்றும் மலைமாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

போடி அருகே முந்தல் பகுதியில் நேற்று காலை நடந்த கூட்டத்தில் சீமான் பேசுகையில்…

2006 ஆம் ஆண்டு வனங்களில் மாடுகள் மேய்க்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டது. மேய்ச்சலுக்கு அனுமதி இல்லாமல் போனதால் சுமார் 1.5 இலட்சம் மலைமாடுகள் இருந்த நிலையில், தற்போது 50 முதல் 60 ஆயிரமாக குறைந்து விட்டது. இந்த நிலை நீடித்தால் மாட்டினங்கள் அழிந்து விடும். விவசாயமும் சேர்ந்து அழிந்து முற்றிலும் வறண்ட பகுதியாக மாறிவிடும் என்றார்.

மாலையில் நடந்த போராட்டத்தின் போது,சீமான் தலைமையில், போடி முந்தல் பகுதியில் இருந்து குரங்கணி மலைச்சாலைக்கு சுமார் 1,500 க்கும் மேற்பட்ட மலைமாடுகளுடன், அக்கட்சியினர் நடந்து சென்றனர். அப்போது அடகுபாறையில், வனப்பகுதிக்குள் நுழைய விடாமல் வனத்துறையினர் தடுப்புகளை வைத்து தடை ஏற்படுத்தியிருந்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்த முயல்வதாகக் கூறி சீமானை காவல்துறை மற்றும் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இருப்பினும் வனத்துறையினரின் தடையை மீறி வனப்பகுதிக்குள் மாடுகளுடன் அவர்கள் நுழைந்தனர். சுமார் ஒரு மணி நேரம், மலைமாடுகளை அப்பகுதியில் மேயவிட்டனர். அதன் பின்னர் சீமான் உள்ளிட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது….

இலங்கையில் நடந்ததைப் போல தமிழ்நாட்டிலும் இனப் படுகொலை நடக்கிறது. இலங்கையில் குண்டுகளை வீசி இனப் படுகொலை செய்தனர். ஆனால் தமிழ்நாட்டில் மது குடிக்க வைத்து இனப் படுகொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் நடந்ததும், தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பதும் ஒன்றுதான். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் தொடர்ந்து இலட்சக் கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நாட்டை உலகத்தின் தலை சிறந்த நாடாக, பூமியின் சொர்க்கமாக மாற்றி படைப்போம். 5 ஆண்டுகளில் சிறந்த மாநிலமாக மாற்றுவேன். அவ்வளவு திட்டங்கள், சிந்தனைகள், கனவுகள் எங்களிடம் உள்ளன.அதனை நிறைவேற்ற கூடி வாருங்கள் ஓடி வாருங்கள் என் மக்களே.

ஆடு, மாடுகள் மேய்ப்பது தொழில்முறை அல்ல. அது எங்களது வாழ்க்கை முறை. கலாச்சாரம், பண்பாடு. மாட்டுப்பொங்கல் என்று கொண்டாடிய பரம்பரை நாங்கள். மேய்ச்சல் வனநிலம் என்பது எங்களது உரிமை. ஜாதி, மதம் கொடிய நோய், அது நம்மைப் பிரிக்கும். ஆனால் மொழி உணர்வே நம்மை இணைக்கும்.

கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். கூரிய கொம்புகள் இருந்தும் மாடுகளுக்குப் போராடத் தெரியவில்லை. மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப்பகுதி, வனப்பகுதியில் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்படும்.

மலைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில் அங்கு ஆடு, மாடுகள் மேயவேண்டும். நீரின்றி அமையாது உலகு எனில் ஆடு, மாடு இன்றி அமையாது காடு

இவ்வாறு சீமான் பேசினார்.

இந்நிலையில்,போராட்டத்தைப் பற்றி வனத்துறையினர் அளித்த புகாரின்பேரில் சீமான் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் மீது குரங்கணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Response