முன்னாள் முதலமைச்சர் செயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சியில் இருந்த நான்காண்டுகள் அதிமுக ஒன்றாக இருந்தது. 2021 தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சி பறி போனதும் அக்கட்சிக்குள் அதிகாரப் போட்டி தலைதூக்கியது.
அதன் விளைவாக அக்கட்சி மூன்று நான்கு பிரிவுகளாகப் பிளவுபட்டிருகிறது.இதனால் எல்லாத் தேர்தல்களிலும் அதிமுக தோல்வியைச் சந்தித்துவருகிறது. அதோடு இதுவரை அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு தொகுதியிலும் நிறையப் பேர் முன்வருவார்கள். இப்போது எல்லோரும் பின்வாங்குகிறார்கள் எனும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பது அதிமுக தொண்டர்களின் ஒட்டுமொத்தக் கருத்தாக உள்ளது.
ஒருங்கிணைந்தால் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடும் என்கிற அச்சத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு இணங்காமல் இருக்கிறார்.
அவர் தவிர மற்ற அனைவரும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதில் ஆர்வமாகவும் தீவிரமாகவும் இருக்கின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் நேற்று அளித்த பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
அவர் கூறியதாவது….
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். மேலும், செப்டம்பர் 4 ஆம் தேதி ஓ.பி.எஸ். தலைமையில் நடக்கப்போகும் மாநாட்டில் பலரும் பங்கு பெறுவார்கள். செப்டம்பர் மாதம் இறுதிக்குள் பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுக ஒன்றுபட்டுவிடும்.2026 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிமுகவை ஒருங்கிணைக்க மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
அதை உறுதிப்படுத்துகிற மாதிரி வைத்திலிங்கம் பேசியிருக்கிறார்.அவருடைய பேச்சு, ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.