நெஞ்சை நடுங்க வைக்கும் செம்மணி புதைகுழி – தமிழ்த் தலைவர்கள் எங்கே?

தமிழீழம் யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி கிராமத்திற்கு அருகில் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் உயிரோடும் உயிரற்ற நிலையிலும் புதைக்கப்பட்டனர்.

தமிழீழத் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் இனப்படுகொலை செய்யப்படவில்லை. அதற்கு முன்பாகவே பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஈழத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்படியான ஒரு நிகழ்வே செம்மணிப்படுகொலை.

1998, 1999ஆம் ஆண்டுகளில், செம்மணிப் படுகொலைப் புதைகுழி உலகத்துக்குத் தெரிந்து பேரரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எவராலும் மறக்க முடியாத இனப்படுகொலைப் புதைகுழி. சிங்களப் படைகளின் கொடுஞ்செயலான செம்மணிப் புதைகுழியை அம்பலமாக்கும் கிளர்ச்சிக்குரிய நிகழ்வொன்று 1998 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி நடந்தது.

கிருசாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள சிப்பாய் சோமரத்தின ராஜபக்ச கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலத்தில்,,,

செம்மணியில் கிருசாந்தி, அவரது தம்பி பிரணவன், தாயார் ராசம்மா குமாரசாமி, அயலவர் சிதம்பரநாதன் மட்டுமல்ல இன்னும் பலர் – 300ல் இருந்து 400 வரை – புதைக்கப்பட்டுள்ளார்கள். நான் கிருசாந்தியையோ மற்றவர்களையோ கொலை செய்யவில்லை. எனது மேலதிகாரிகள் கொன்றுவிட்டு கொண்டு வந்த சடலங்களை அவர்களின் கட்டளையின் பேரில் புதைப்பதுதான் எனது வேலை. என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும் என்றான்.

அப்போதுதான் அந்தக் கொடுமைகள் முழுமையாக வெளியாகி உலகத்தை அதிர வைத்தன.

கால்நூற்றாண்டு கடந்து விட்ட பின் இப்போது அந்த கிராமத்தில் கட்டிடமொன்று கட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது ஏராளமான எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. அதிர்ச்சியடைந்த மக்கள் அங்கு மேலும் தோண்டியபோது, ஒரு தாய் தன் குழந்தையைக் கட்டியணைத்தபடியே மரித்துப் போயிருந்த காட்சி மட்டுமின்றி இன்னும் பல்வேறு நிலைகளில் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுக் கொண்டேயிருகின்றன.

ஆனால் இதுகுறித்து உள்ளூர் தாண்டி எங்கும் செய்திகள் வராமல் பார்த்துக் கொள்கிறது சிங்கள அரசாங்கம்.

அரசாங்கம் அப்படிச் செய்வதில் வியப்பில்லை, தமிழீழ மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களும் இதுகுறித்துக் குரலெழுப்பவில்லை என்பதுதான் அதிர்ச்சி தரத்தக்கதாக இருக்கிறது.

அங்கு காணும் எலும்புக் கூடுகளின் நிலை நெஞ்சை உலுக்கி நிலைகுலையச் செய்ய வைப்பதாக இருக்கின்றன.ஆனால் அரசியல் தலைவர்களை அவை ஒன்றுமே செய்யவில்லையா? என தமிழீழ மக்கள் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Response