
மதுரையில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் மதுரை விமான நிலையம் வருவதாக இருந்தது.ஆனால் தாமதமாகப் புறப்பட்டு, இரவு 10.30 மணிக்குத்தான் அமித்ஷா மதுரை விமான நிலையத்துக்கு வந்தார்.
அதன்பின் நேற்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அமித்ஷா வருகையின் போது கூட்டணி தொடர்பாகச் சில விசயங்களை இறுதி செய்யத் திட்டமிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக ஒரு முடிவெடுத்து இந்தக் கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவிதினகரன் ஆகியோருக்கு என்னென்ன பங்கு? அல்ல்து அதிமுகவாக ஒருங்கிணைந்தே செயல்படப் போகிறார்களா? என்பதை உறுதி செய்து அறிவிப்பது அவருடைய வருகையின் முக்கிய நோக்கமாக இருந்ததாம்.
அப்படி உறுதி அறிவித்தால்தான் கூட்டணி வலுப்பெறும் என்பது ஒன்றிய உளவுத்துறையின் கணிப்பு என்று சொல்லப்படுகிறது.
ஆனால்,அதற்கான திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலா ஆகிய மூவருமே தத்தமது நிலையிலிருந்து இறங்கி வரவில்லையாம். இதனால் அமித்ஷாவின் அந்தத் திட்டம் தோல்வியடைந்தது.
அடுத்து கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும் என்று சொல்லிக் கொண்டிருப்பதை செயலில் காட்ட பாமகவை கூட்டணியில் சேர்த்துவிட்டோம் என்று அறிவிக்க எண்ணினாராம் அமித்ஷா.மருத்துவர் இராமதாசின் உறுதி காரணமாக அதுவும் நடக்கவில்லை.
மதுரையில் நிகழ்ச்சி நடப்பதால் தென் தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகளையும் இணைத்து கூட்டணி அறிவிப்பை வெளியிடலாம் என்றும் திட்டமிட்டிருந்தார்களாம்.
ஆனால் முந்தைய இரண்டு திட்டங்களும் செயல்பாட்டுக்கு வராததால் மூன்றாவது திட்டத்தை அவர்களே கைவிட்டுவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
கூட்டணிக் கட்சிகள் நிலைமைதான் அப்படி என்றால் சொந்தக் கட்சியிலேயே தேர்தல் பணிகளில் யார் யாரை முன்னிறுத்துவது? என்கிற பேச்சும் தோல்வியடைந்துவிட்டதென்கிறார்கள்.ஏனெனில் நைனார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்குமான மோதல் வெளிப்படையாக வெடித்ததால் அமித்ஷா அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.அதனால் அந்த முடிவையும் எடுக்கமுடியாமல் தடுமாறி தள்ளிப்போட்டுவிட்டாராம்.
இதனால் இம்முறை அமித்ஷாவின் தமிழ்நாடு பயணம் முற்று முழுக்க தோல்வியில் முடிந்திருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


