துணைமுதல்வர் என்பது டம்மி பதவி – ஓபிஎஸ் ஒப்புதல் மீள்பதிவு

தமிழ்நாடு அமைச்சரவை ஐந்தாவது முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இப்போதைய மாற்றத்தின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையை ஒதுக்குவதோடு, துணை முதல்வராகவும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,துணை முதலமைச்சர் பொறுப்பு பற்றி அப்பொறுப்பை வகித்திருந்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதை நினைவு கூர்கிறோம்.

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில், மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி வைப்பது, தேர்தலுக்குத் தயாராவது, கட்சியைப் பலப்படுத்துவது குறித்த, தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அக்டோபர் 11,2023 அன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

அக்கூட்டத்தின் முடிவில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது…..

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை. எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் தான் உள்ளது. மற்ற பொறுப்புகள் எனது விருப்பத்தின் அடிப்படையில் தான் கொடுக்க முடியுமே தவிர சட்டத்தின் அடிப்படையில் கொடுக்க முடியாது என்று பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார். பேரவைத் தலைவரின் விருப்பத்தின் பேரில் தான் இருக்கை வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற பொறுப்பு இல்லை. துணை முதல்வர் பொறுப்புக்கு சிறிய அதிகாரம் கூட கிடையாது. அது ஒரு டம்மி பதவி. அதுபோல தான் இதுவும்.

என்று கூறியிருந்தார்.

சிறிய அதிகாரம் கூட இல்லாததுதான் துணை முதல்வர் பொறுப்பு என்று அந்தப்பதவியில் இருந்தவரே வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.

அப்படி இருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்றால்?

திமுகவில், மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு இவர்தான் தலைவர் என்பதைப் பறைசாற்றுவதற்காகவும் அடுத்த தலைவராக அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

Leave a Response