கடந்த பல ஆண்டுகளாகவே ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டும் உறுதியை பாஜக அளித்தது. இதனால், இராமர் கோயில் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்வதாகப் புகாரும் எழுந்திருந்தது.
இந்நிலையில், இதன் மேல்முறையீட்டு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் நவம்பர் 9, 2019 இல் இராமர் கோயிலுக்கான வழி பிறந்தது. இதையடுத்து நீதிமன்ற அமர்வின் உத்தரவின்படி, அறக்கட்டளை அமைக்கப்பட்டு இராமர் கோயில் கட்டப்பட்டது.
இதற்கான பூமி பூஜையை பிரதமர் மோடி முன்னிருந்து நடத்தினார்.2024 சனவரியில் இராமர் கோயிலின் தரைத்தளம் கட்டப்பட்டு பிரதமர் நரேந்திரமோடியால் திறந்து வைக்கப்பட்டது.
எனவே, இராமர் கோயிலால், உ.பி.யில் பாஜகவிற்கு அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி உறுதி எனக் கருதப்பட்டது. இதன் பலன் நாட்டின் இதர மாநிலங்களிலும் கிடைக்கும் எதிர்பார்ப்பும் பாஜகவிற்கு இருந்தது.
ஆனால், அதன் பலன் தற்போது உ.பி.யிலேயே கிடைக்காமல் போய் விட்டது. அயோத்யாவின் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லுசிங் சுமார் 55,000 வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளார்.
இங்கு சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட அவ்தேஷ் பிரசாத்திற்கு கிடைத்த வெற்றி வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இராமர் கோயில் விவகாரம் எழுந்தது முதல் பைசாபாத்தும் ஒரு முக்கியத் தொகுதியாகி விட்டது.
நீண்ட காலமாக பாஜக வசமுள்ள பைசாபாத்தில் 2009 இல் மட்டுமே காங்கிரசு வென்றிருந்தது. பிறகு 2014 முதல் பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள லல்லுசிங் மீண்டும் அங்கு போட்டியிட்டார்.
இவர் அயோத்தி சட்டப்பேரவைத் தொகுதியில் 5 முறை பாஜக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லல்லுசிங்கின் வெற்றி, 2014 தேர்தலில் தோல்வியில் முடிந்துள்ளது.
பைசாபாத்தில் இந்தியா கூட்டணியின் அங்கமாக இருந்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தனித்துப் போட்டியிட்டது. கடந்த 1989 மக்களவை தேர்தலில் சிபிஐ சார்பில் பைசாபாத்தின் பாராளுமன்ற உறுப்பினரானார் மித்ரஸென் யாதவ்.
இவரது மகன் அர்விந்த்சென் யாதவ் இந்தமுறை சிபிஐக்காகப் போட்டியிட்டார். ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அர்விந்த்சென், பைசாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளரின் வாக்குகளை அதிகமாகப் பிரிப்பார் என அஞ்சப்பட்டது.
இராமர் கோயில் கட்டப்பட்டதில் வெற்றி உறுதி என்கிற எண்ணத்தில் இருந்த பாஜகவும் கடைசிகட்டத் தேர்தல்களில் இராமர் கோயிலை பற்றி மட்டுமே பேசியது.
குறிப்பாக, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இராமர் கோயில் இடிக்கப்பட்டு விடும் என்ற பீதியை பிரதமர் மோடியே கிளப்பியிருந்தார்.
பாஜகவின் ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் பைசாபாத்திற்கு ரூ.50,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அமலாகி வருகின்றன. இருப்பினும், சமாஜ்வாதியை வெற்றிபெறச் செய்து பாஜகவுக்கு நாமம் போட்டுவிட்டனர் பைசாபாத் மக்கள்.
மிகவும் எதிர்பார்த்திருந்த இராமர் நாமம் போட்டுவிட்டதால் நேற்று நடந்த வெற்றிக் கூட்டத்தில் பேசிய மோடி, ஜெய்ஸ்ரீராம் என்று சொல்வதற்குப் பதிலாக ஜெய் ஜெகன்னாத் என்று சொன்னார்.
இது பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் காரர்களிடமே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.