கே.ஏ.குணசேகரன் நினைவேந்தல் கூட்டம்- அவர் பெயரில் அறக்கட்டளை தொடங்க முடிவு

மக்கள் கலைஞர் – தன்னானே பாடகர் – திரை நடிகர் – எழுத்தாளர் – நாடக இயக்குனர் – நாட்டுப்புறவியல் ஆய்வாளர் -சேரிப்புறத்து கதை சொல்லி – தலித் அரங்கியலின் தந்தை – தலித் பண்பாட்டின் அடையாளம் – புதுவை பல்கலைக்கழக நிகழ்கலைத்துறை புல முதன்மையர் – பேராசிரியர் என பன்முக அடையாளம் கொண்ட கே.ஏ.குணசேகரன் நினைவேந்தல் கூட்டம் 31.1.2016 அன்று புதுவை பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தது. எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் கே.ஏ.ஜி -யின் திருவுருவப்படத்தை திறந்து வைக்க புதுவை பல்கலை ஆங்கிலத்துறை பேராசிரியர் நடராஜன் மாலை அணிவித்தார்.

எழுதாளர் பா. செயப்பிரகாசம், பேராசிரியர் நா. நடராஜன், கவிஞர் சுகிர்தராணி, பேராசிரியர் திருநாகலிங்கம், பேராசிரியர் சூ. ஆம்ஸ்ட்ராங், பேராசிரியர் அ. அறிவுநம்பி, முனைவர். வீ. வாலசமுத்திரம், பேராசிரியர் அசுவகோஷ், கவிஞர். கு. உமாதேவி, தோழர். சிவா, நிகழ்கலைத்துறை பேராசிரியர். ஆறுமுகம், காந்திகிராமம் பல்கலைக்கழக பேராசிரியர் முத்தையா, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த வீரபாகு, முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பட்டாபி ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். கே.ஏ.ஜி -யின் பிள்ளைகளான மருத்துவர். அகமன், மருத்துவர். குணவதி ஆகியோர் இடையிடையே எழுச்சிப்பாடல் பாடினர். முகிலோசை லெபோரா, இசையாசிரியர் முகுந்தன் ஆகியோரும் பாடல் பாடினர்.

நாடகத்துறை பயிலும் ஏழை மாணவர்களுக்கும், சிவகங்கையில் படிக்கும் சிறுவர்களுக்கும் படிப்புதவி செய்யவும், கே.ஏ.ஜி. விட்டுச் சென்ற கலை இலக்கிய அரசியல் பணியைத் தொடர்ந்து முன்னெடுக்கவும் ஏதுவாக அறக்கட்டளை ஒன்றை கே.ஏ.ஜி. பெயரில் தொடங்கவும், நினைவு மலர் ஒன்றை வெளியிடவும் பலர் ஆலோசனை வழங்கினர். இறுதியாக அக்கா முனைவர். வீ. ரேவதி நன்றி கூறி கூட்டத்தை முடித்தார்.

Leave a Response