வீர தீரச் செயல் விருது பெற்ற ஜோதிநிர்மலாசாமி -தேர்தல் ஆணையராக நியமனம்

தமிழ்நாடு தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தை பதவியேற்றதில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை என்று தமிழ்நாடு அரசு அண்மையில் உயர்த்தியது.

இந்தச் சூழலில், தமிழ்நாடு தேர்தல் ஆணையராக இருந்த பழனிக்குமார் மார்ச் 9 ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

இதனால் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், அப்பதவியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலராக உள்ள பா.ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிக்கை நேற்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,பா.ஜோதி நிர்மலாசாமியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஆளுநர் நியமித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் பதவியேற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஜோதி நிர்மலாசாமி வரும் மே மாதம் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அளவில் தேர்தல் ஆணையர் பதவி விலகல் சர்ச்சையாகியிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் புதிய தேர்தல் ஆணையர் நியமனம் நடந்துள்ளதால் இச்செய்தி கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.

ஜோதிநிர்மலாசாமி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.அவருடைய அப்பா கல்லூரி வரலாற்றுப் பேராசியர். அம்மா ஆசிரியை.

முதுகலை வரலாறு படித்த ஜோதிநிர்மலாசாமி, அதன்பின் குரூப் 4, குரூப் 2, ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் ஆகியனவற்றில் தேர்ச்சி பெற்றவர்.பின்பு குரூப் 1 இல் தேர்ச்சி.முதல்பணியாக துணை ஆட்சியர். அப்புறம் ஆர்டிஓ, டிஆர்ஓ, அப்புறம் ஐ.ஏ.எஸ் ஆக வந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக இருந்தவர்.

கன்னியாகுமரி ஆட்சியராக இருந்தபோது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதியிடம், வீர தீரச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது பெற்றார். தங்கப்பதக்கம், சான்றிதழ், 5 இலட்சம் ரூபாய் ரொக்கத் தொகை ஆகியனவற்றைக் கொண்டது அந்த விருது.

Leave a Response