பாஜக சொல்வது நடக்கும் – சீமான் அதிர்ச்சித் தகவல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது…

சாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறோம். ஆதித் தமிழ்க் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதைச் செய்கிறோம்.

தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பே இருக்காது. எனவே அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவருக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம்.

நாட்டை அரை நூற்றாண்டுக் காலம் ஆண்ட காங்கிரசுக் கட்சியை சேர்ந்த இராகுல் காந்தி தற்பொழுது சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறார்.இவ்வளவு நாள் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார்?

காங்கிரசுக் கட்சி இனி இருக்காது,எனவே பாஜகவிற்குச் செல்லலாம் என விஜயதாரணி நினைத்திருக்கலாம். காங்கிரசுக் கட்சியாவது அவருக்கு மூன்று முறை எம்.எல்.ஏ சீட்டு வழங்கியது.ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை அக்கட்சியில் சேரும் அன்று ஏதாவது செய்வார்கள்.அதன் பின் எந்தச் செய்தியும் வராது.

வாக்கு இயந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும் போது முடிவு மக்கள் கையில் இருக்காது.பாஜகவினர் ஒரு கையில் நோட்டுப் பெட்டியும் மற்றொரு கையில் வாக்குப் பெட்டியும் வைத்துள்ளார்கள்.அவர்கள் எத்தனை சீட்டு வெல்வோம் எனக் கூறுகிறார்களோ அத்தனையும் வெல்வார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response