ஊழல் வழக்கில் சிக்கியவருடன் இரகசிய ஆலோசனை – ஆர்.என்.இரவி சர்ச்சை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

துணைவேந்தர் ஜெகநாதனுக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டிருந்தது. இந்த பிணையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று (12 ஆம்தேதி) விசாரணைக்கு வர இருக்கிறது. பிணையில் வெளியே வர முடியாத வழக்குகள் போட்டும், துணைவேந்தருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதால், பிணை வழங்கிய மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் நீதித்துறை நடுவர் பிணை வழங்கியபோது, இருநபர் பிணை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி 2 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், துணைவேந்தர் ஜெகநாதன், நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற வேண்டும். ஆனால் உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். அவர் ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்ற பிறகு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் காவல்நிலையத்தில் கையெழுத்திட முடியாது என கருதிய காவல்துறையினர் அரசு சட்ட ஆலோசகருடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், துணைவேந்தர் ஜெகநாதனைச் சந்தித்துப் பேசுவதற்காக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி நேற்று பெரியார் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். பகல் 12.50 மணிக்கு பல்கலைக்கழகம் சென்ற அவருக்கு துணைவேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

துணைவேந்தரின் அறைக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.இரவி அவருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது துணைவேந்தர் மீது தற்போது போடப்பட்டுள்ள வழக்கின் நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்த ஆளுநர், இந்த விவகாரத்தில் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும், தைரியமாக வழக்கை எதிர்கொள்ள அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. சுமார் 25 நிமிடத்திற்கு நடந்த இந்தச் சந்திப்பின்போது, ஆளுநர் மற்றும் துணைவேந்தர் ஆகியோர் மட்டுமே அறையினுள் இருந்துள்ளனர். தொடர்ந்து சிண்டிகேட் கூட்ட அரங்கில் பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது துணைவேந்தர் மீதான வழக்கு தொடர்பாக ஆளுநர் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், துணைவேந்தருக்கு தனது முழு ஆதரவையும் தெரிவிக்கும் வகையிலேயே ஆளுநரின் வருகை மற்றும் ஆலோசனைக் கூட்டம் இருந்தது. குறிப்பாக ஆளுநர் பேசும்போது, துணைவேந்தரின் கைது நடவடிக்கைகளை பார்த்திருப்பீர்கள். இவை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. அதேசமயம், அவரைக் கைவிட மாட்டோம். ஆதரவாக இருப்போம். தேவை ஏற்பட்டால் சட்டப் போராட்டம் நடத்துவோம். இந்த விவகாரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் துணைவேந்தருக்குத் துணை நிற்க வேண்டும். எங்களைப் போல, நீங்களும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்தார். சுமார் 4 நிமிடங்கள் மட்டுமே இந்தக் கூட்டம் நடந்தது என்றனர்.

பெரியார் பல்கலைக்கழக அலுவலர்கள் சந்திப்பு என்ற பெயரில், துணைவேந்தருக்கு அரை மணிநேரம் ஆதரவு தெரிவித்துவிட்டு, பெயரளவில் துறைத் தலைவர்களிடம் ஓரிரு நிமிடங்கள் மட்டும் ஆளுநர் பேசிவிட்டுச் சென்றதாகப் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஊழலில் சிக்கிக் கைதான துணைவேந்தருடன் இரகசிய ஆலோசனை நடத்தியது மட்டுமில்லாமல், அவருக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று துறைத் தலைவர்களிடம் ஆதரவு திரட்டி உள்ளது, துணைவேந்தர் ஜெகநாதனைக் காப்பாற்ற ஆளுநர் துடிக்கிறாரா? என்று பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்த ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்து பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பில் பல்கலைக்கழகம் முன்பு நேற்று கறுப்புக்கொடி ஏந்தி நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடந்தினர். அப்போது, ‘திரும்பிப் போ… திரும்பிப் போ.. ஆளுநரே திரும்பிப் போ… ஊழல் வழக்கில் உள்ள துணைவேந்தருக்கு துணைபோகும் ஆளுநரைக் கண்டிக்கிறோம்… துணை போகாதே துணை போகாதே ஊழல் குற்றவாளிக்குத் துணை போகாதே…’ என்ற பதாகைகளுடன் முழக்கம் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் இருநூறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆளுநரின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.துணைவேந்தர் எங்கள் ஆள் அவர் மீது கை வைப்பீர்களா? என்று அதிகாரிகளை மிரட்டும் தொனியில் ஆளுநர் நடந்துள்ளார். இது முற்றிலும் தவறானது என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Response