பாஜகவை வென்றது காங்கிரசு – அமைச்சர் பதவியிழந்தார்

2023 நவம்பர் மாதம் தெலங்கானா,சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம்,இராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது.

அப்போது, இராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள கரண்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட இருந்த காங்கிரசு வேட்பாளர் குர்மீத் சிங் காலமானதை தொடர்ந்து அத்தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இதையடுத்து மீதமுள்ள 199 தொகுதிகளில் 2023 நவம்பர் 25 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கட்சி 115 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து கரண்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் 2024 சனவரி 5 ஆம் தேதி நடந்தது.

இராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான அமைச்சரவையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி இணை அமைச்சராகப் பதவியேற்ற சுரேந்தர் பால் சிங் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். காங்கிரசு தரப்பில் குர்மீத் சிங்கின் மகன் ரூபிந்தர் சிங் நிறுத்தப்பட்டார்.

இங்கு 81.38 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங்கிரசு வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750-வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பாஜக முதல்வர் பஜன் லால் சர்மா சில நாட்களுக்கு முன்பு, சுரேந்திர பால் சிங்கை கேபினட் அமைச்சராக நியமித்து அவருக்கு 4 இலாக்காக்களை ஒதுக்கினார்.

இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் இராஜஸ்தான் அமைச்சர் பதவியை சுரேந்திர பால் சிங் இழந்துள்ளார்.

காங்கிரசுத் தொண்டர்கள் இவ்வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Response