தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படும் இந்தியன் ஆயில் குழு – விருதுநகர் அதிர்ச்சி

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சார்பில் ஏராளமான பெட்ரோல் பங்க்குகள் செயல்பட்டுவருகின்றன.

அந்த பெட்ரோல் பங்குக்களில் சரியான அளவில் பெட்ரோல் விநியோகிக்கப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்கும் குழு ஒன்றை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் நியமித்திருக்கிறது.ஏஏசி என்றழைக்கப்படும் அக்குழுவின் வேலை என்னவென்றால்? எப்போது வேண்டுமானாலும் எந்த பங்க்கில் வேண்டுமானாலும் சோதனை செய்யலாம் என்பதுதான்.

அண்மையில் விருதுநகர் மாவட்டத்தில் இக்குழுவினர் சோதனையில் ஈடுபட்டு, குறைவான அளவில் பெட்ரோல் போட்டதாகக் குற்றம் சாட்டி மூன்று இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்குகளுக்குத் தடை விதித்திருக்கிறார்கள்.

ஐந்து லிட்டர் விநியோகத்தில் 10 மில்லி குறைவாக இருந்ததாகக் குற்றம் சாட்டி இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக ஐந்துலிட்டர் விநியோகத்தில் 25 மில்லி வரை முன்பின்னே இருக்கலாம் என்பது அரசாங்கமே ஒப்புக்கொண்ட அளவு என்று பெட்ரோல் பங்க் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

அப்படியிருக்கும்போது 10 மில்லி குறைவு என்று சொல்லித் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வெளிப்படையாகப் பார்த்தால் நல்ல விசயம்தானே என்றிருக்கும். இதற்குப் பின்னால் மிகப்பெரிய சதித்திட்டம் இருப்பதாகச் சந்தேகிக்கிறார்கள்.

அது என்ன?

அண்மைக்காலமாக தனியார் நிறுவனமான எஸ்.ஆர் பெட்ரோலியம் சார்பில் நயாரா எனும் பெயரில் பெட்ரோல் பங்க்குகள் தொடங்கப்பட்டுவருகின்றன.

விருதுநகர் மாவட்டத்திலும் இவை அதிக அளவில் இருக்கின்றன. இப்போது தடை விதிக்கப்பட்டிருக்கும் மூன்று இந்தியன் ஆயில் பங்க்குகளும் இந்த நயாரா பங்க்குகள் அருகில் இருப்பவை. இதனால் நயாரா பங்க்குகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக இந்தியன் ஆயில் பங்க்குகள் மூடப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்.

இந்தியன் ஆயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர்கள் நயாரா நிர்வாகத்துக்கு அனுசரணையாக நடந்து கொண்டிருப்பது விசயம் தெரிந்தவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக தாம் சம்பளம் வாங்கும் நிறுவனத்தையே முடக்க நினைக்கும் பொதுத்துறை நிறுவன அதிகாரிகளின் நிலை அந்த மாவட்டத்தில் உள்ளோருக்குப் பெரும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

இந்தியன் ஆயில் நிர்வாகம் இதைக் கவனிக்குமா? என்பதுதான் இப்போது விருதுநகர் மாவட்டத்தினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Leave a Response