ஆயுதபூசை விடுமுறை கட்டணக்கொள்ளை – நடவடிக்கை

அதிகக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.17 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டது, 69 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.இத்தகவலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை, நாளை ஞாயிறு விடுமுறையுடன் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை ஆகியன சேர்ந்து வருவதால் 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகம் செல்வர். மேலும் தொடர் விடுமுறை வருவதால் பலர் சுற்றுலா செல்ல வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்வர்.இதன் காரணமாக பேருந்து, தொடர்வண்டிகளில் இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

இதனால், தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்வண்டிகள் மற்றும் அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காதவர்கள் கடைசியாக ஆம்னி பேருந்துகளை நோக்கிச் செல்கின்றனர். பொதுமக்களின் தேவையைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த முறையும் வழக்கம் போல பயணிகளின் தேவையைப் பொறுத்து கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். சில பேருந்துகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இந்நிலையில் அதிகக் கட்டணம் வசூலிக்கும், விதிமுறைகளை மீறும் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் விதிகளை மீறிய ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.17 இலட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது…..

பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் வருகின்றன. மேலும் பண்டிகை நாட்கள் தவிர சாதாரண நாட்களிலும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சோதனைகளை நடத்தி வருகின்றனர். மேலும் பண்டிகைக் காலங்களில் அதிகக் கட்டண வசூல்களைத் தடுக்கச் சிறப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நேற்று வரை 4,917 ஆம்னி பேருந்துகளில் அதிரடிச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் விதிகளை மீறிய 903 பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களுக்கு ரூ.17,40,000 அபராதம் விதிக்கப்பட்டது. விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.9,46,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்தப் பேருந்துகள் ரூ.15 இலட்சம் வரி செலுத்தாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ரூ.2,20,300 வசூலிக்கப்பட்டது. மேலும் 69 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Response