சேப்பாக்கம் மைதானமும் மோடி மைதானமும் – தமிழர் பெருமை சொல்லும் பதிவு

2023 உலகக்கோப்பை மட்டைப்பந்துப் போட்டியின் அங்கமாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி,அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (அக்டோபர் 14,2023) நடைபெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 191 ரன்களில் சுருண்டது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி.

இந்திய அணி 30ஆவது ஓவர் 3 ஆவது பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.

இந்தப்போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் ஆட்டமிழந்து வெளியேறிய போது ஜெய்ஸ்ரீராம் முழக்கம் எழுப்பியது கடும் விமர்சனங்களை உண்டாகியிருக்கிறது.

இதையொட்டி மூத்த ஊடகவியலாளர் ஏழுமலை வெங்கடேசன் எழுதியுள்ள பதிவு…..

அவரவர்க்கென தனி குணம் உண்டு.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் இரசிகர்கள் மிகவும் கேவலமாய் நடந்து கொண்டதாகப் பலரும் கோபப்படுகின்றனர்.

பாகிஸ்தான் வீரர் அவுட் ஆகிச் செல்லும்போது ஜெய் ஸ்ரீராம் என்ற கோசம் விண்ணைப் பிளந்தது கேவலத்தின் உச்சம் என்கின்றனர்.

(நாம் நேற்றைய மேட்ச்சை பார்க்கவே இல்லை. ரிசல்ட்டே இரவு 10 மணிக்கு தான் நமக்குத் தெரியும்)
அந்தக் கூறுகெட்ட குக்கர்களுக்கு, போலோ பாரத் மாதா கி ஜே, ஜெய் ஸ்ரீராம்.. இந்த இரண்டையும தவிர வேற எதுவுமே தெரியாது.

வீட்டில் சாக்கடை அடைத்துக் கொண்டால் கூட அந்த அடைப்பு நீங்க இந்த இரண்டு கோஷங்களைத்தான் எழுப்பி தானாகவே தீர்வு கிடைத்துவிடும் என்று நம்புபவர்கள்.

இன்றும் நினைவு இருக்கிறது.

1997, சென்னை சேப்பாக்கம் மைதானம்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் சையத் அன்வர் சதம் அடிக்கிறார்.

பாரபட்சமே பார்க்காமல் தமிழ்நாட்டு இரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கரகோஷம் எழுப்புகின்றனர்.
இதையெல்லாம் விட, ஒரு நாள் போட்டிகள் அப்போது அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகளில் 189 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தது தான் சாதனையாக இருந்தது.

அந்த 189 ரன்களை சையத் அன்வர் கடந்து புதிய சாதனை படைத்த போது சேப்பாக்கம் மைதானமே 5 நிமிடங்களுக்கு ரசிகர்களின் கைதட்டல்களால் அதிர்ந்து போனது.

இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதைவிட உயிரைக் கொடுத்து விளையாடிய அன்வர் 200 ரன்களை கண்டிப்பாக அடிப்பார் என்றே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

விளையாடுபவன் அற்புதமாய் திறமைகளைக் காட்டிக்கொண்டு இருக்கிறான் என்றால் அவன் எந்த நாடாக இருந்தாலும் சரி அவன் பக்கம்தான் உண்மையிலேயே விளையாட்டை நேசிப்பவர்கள் ஆதரவு தன்னையும் அறியாமல் போகும்.

அந்தப் போட்டியில் அன்வர் எதிர்பாராதமாக 194 ரன்களிலேயே அவுட் ஆகிவிட்டார்.

வருத்தங்களையும் பாராட்டுகளையும் ஒன்றாக கலந்து மறுபடியும் ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று பலத்த கைத்தட்டல்களோடு சேப்பாக்கம் மைதானம் சையத் அன்வருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு விடை கொடுத்தது.

சொந்த நாட்டில் கூட இப்படி ஒரு ஆதரவை கண்டதில்லை என்று அன்வர் கண்கலங்கினார்.

இந்தியா தோற்றுவிட்ட அந்த போட்டியை நேரில் கண்டு களித்த நாம், அதே வருத்தத்தோடும் அன்வரின் உலக சாதனையை கண்ட சந்தோஷத்தோடும் சேப்பாக்கத்தில் இருந்து அன்று இரவு நண்பர்களோடு பெரம்பூருக்கு நடந்தே சென்று விட்டோம்.

விளையாடுபவர்கள் ஜெயிக்கலாம், தோற்கலாம். ஆனால் விளையாட்டை நேசிப்பவர்கள் மத்தியில் என்றைக்குமே விளையாட்டு தோற்காது.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டு இரசிகர்களுக்கும் குஜராத் இரசிகர்களுக்கும் உள்ள வேறுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்தப்பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

Leave a Response