இந்தியாவில் புலிகள் அதிகரிப்பு – அமைச்சர் அறிவிப்பு

சர்வதேச புலிகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை குறித்து ஒன்றிய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகரில் 2022 ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்புப் பட்டியலை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது…..

இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுக்கப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 3,682 புலிகள் உள்ளன. மபி, கர்நாடகா, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த 4 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரித்து உள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 785 புலிகள், கர்நாடகாவில் 563, உத்தரகாண்ட் 560, மகாராஷ்டிராவில் 444 புலிகள் உள்ளன.

புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு இந்தியாவின் முன்மாதிரியான முயற்சிகள் வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, தேசத்தின் உறுதிக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாகும். புலிகள் பாதுகாப்பின் கீழ், இந்தியா தனது புலிகளின் எண்ணிக்கையை வெற்றிகரமாகப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், அனைத்து உயிரினங்களின் எதிர்காலத்தையும் பாதுகாத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சாதனைக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில், காளி, மேல்காட், பிலிபிட், தடோபா அந்தாரி, நவேகான் மற்றும் பெரியார் ஆகிய ஆறு புலிகள் காப்பகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தியாவில் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கார்பெட்டில் 260 புலிகள், பந்திப்பூரில் 150, நாகர்ஹோலே 141, பாந்தவ்கர் 135, துத்வா 135, முதுமலையில் 114 , கன்ஹா 105, காசிரங்கா 104, சுந்தர்பன்ஸ் 100 , தடோபா 97 , சத்தியமங்கலத்தில் 85, மற்றும் பென்ச் காப்பகத்தில் 77 புலிகள் உள்ளன.

18 புலிகள் காப்பகங்களில் 10 க்கும் குறைவான புலிகள் தான் உள்ளன. அவை உத்தரபிரதேசத்தில் உள்ள ராணிப்பூர், சட்டீஸ்கரில் அச்சனக்மர், இந்திராவதி, உடந்தி சிதநதி, ஜார்க்கண்டில் பலமாவ், மகாராஷ்டிராவில் போர் மற்றும் சஹ்யாத்ரி, ஒடிசாவில் சட்கோசியா, ராஜஸ்தானில் முகுந்தரா மற்றும் ராம்கர் விஷ்தாரி, தெலுங்கானாவில் கவால், தமிழ்நாட்டில் களக்காடு முண்டந்துறை, அசாமில் நமேரி, மிசோரமில் தம்பா ஆகியன.

நாட்டில் மொத்தம் 51 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களின் நிர்வாக செயல்திறன் அடிப்படையில் மிகச்சிறந்தது, மிக நன்று, நன்று மற்றும் சுமார் என 4 பிரிவுகளில் காப்பகங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

இதில் தமிழ்நாட்டில் ஆனைமலை, முதுமலை காப்பகங்கள் மிகச்சிறந்த பிரிவிலும், சத்தியமங்கலம், களக்காடு முண்டந்துறை காப்பகங்கள் ‘மிக நன்று’ பிரிவிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை காப்பகம் ‘நன்று’ பிரிவிலும் இடம் பெற்று உள்ளன.

Leave a Response