
அதிமுக ஒற்றைத் தலைமைச் சிக்கல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எழுந்தது. இதனையடுத்து, அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து கலவரம் ஏற்படுத்தியதாக கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் இரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.
தேனி தொகுதி பாராளூமன்ற உறுப்பினர் இரவீந்திரநாத் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டது சம்பந்தமாக மக்களவைத் தலைவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அவரை அதிமுக அல்லாதவர் என அறிவிக்கவில்லை.
அண்மையில் இரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. அந்த வழக்கில் இதுவரை அவர் மேல்முறையீடு செய்யவில்லை.
இந்நிலையில், தில்லியில் பிரதமர் தலைமையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுக சார்பில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.ஓ.பன்னீர்செல்வத்துக்கோ, அவரது தரப்பினருக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனால் பாஜக தலைமை தங்களை மட்டுமே உண்மையான அதிமுக என அங்கீகரித்துள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் இன்று (ஜூலை 20) ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்தார். இதில் இரவீந்திரநாத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தேனி தொகுதி எம்.பி ரவீந்திரநாத் நேற்று அவரது டிவிட்டர் பக்கத்தில், ‘‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன்’’ என பதிவிட்டிருந்தார்.
அதோடு, இன்று (19.07.2023) மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் மாண்புமிகு பாதுகாப்பு துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் ஜி அவர்கள் தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் உடனான கூட்டத்தில் மாண்புமிகு வர்த்தகம், தொழில் துறை, நுகர்வோர் நலன் உணவு துறை, பொது விநியோகத்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு.பியுஷ் கோயல் ஜி, மாண்புமிகு விவகாரங்கள் துறை , சுரங்கம் மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் திரு.பிரகலாத ஜோஷி ஜி, மாண்புமிகு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஜி, மற்றும் மாண்புமிகு வெளியுறவுத்துறை மற்றும் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு.வி.முரளீதரன் ஜி, ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து அ.இ.அ.தி.மு.க மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்தேன்.
என்றும் பதிவிட்டிருக்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்திற்கு அதிமுக தரப்பில் ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேசமயம், நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு அனைத்துக் கட்சித் தலைவர் வரிசையில் இரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்மூலம், பாஜக இரட்டை வேடம் போடுவதாக எடப்பாடி தரப்பு அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மோடியின் அருகே அமரவைக்கப்பட்டதால் பெரும் மகிழ்ச்சியில் இருந்தது எடப்பாடி தரப்பு. ஒருநாள் கூட அந்த மகிழ்ச்சி நீடிக்காமல் பார்த்துக்கொண்டது பாஜக என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


