கர்நாடகத்துக்கு தமிழ்நாடு வல்லுநர் குழுவை அனுப்பவேண்டும் – பெ.மணியரசன் கோரிக்கை

காவிரி நீர்பெற அமைச்சர் துரைமுருகன் புதுதில்லி போனது கணக்குக் காட்டுவதாகவே உள்ளது என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

தமிழ்நாட்டு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள், குறுவைச் சாகுபடியைப் பாதுகாப்பதற்குரிய காவிரி நீரைக் கர்நாடகத்திடம் திறந்துவிடச் செய்வதற்காகப் புதுதில்லி சென்று (05.07.2023), நீராற்றல் துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் செகாவாத் அவர்களை சந்தித்து, மனு கொடுத்துத் திரும்பியுள்ளார்.

ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சர், தமது செயலாளரை அழைத்துக் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் இவ்வேண்டுகோளைத் தெரிவிக்குமாறு கூறியுள்ளார் என்று தமிழ்நாடு அரசின் செய்தி – மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. நாளேடுகளிலும் இவ்வறிக்கை வந்துள்ளது.

குறுவைப் பயிரைப் பாதுகாக்க முடியுமா? என்ற அச்சத்தில் உழவர் பெருமக்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள். மேட்டூர் அணையில் கிடுகிடுவென தண்ணீர் வற்றி, இன்னும் சில நாட்களுக்கே இப்போது திறந்துவிடும் அளவில், காவிரி நீரை குறுவைக்குத் திறந்துவிட முடியும் என்ற அவலநிலை உள்ளது. அதற்குள் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் திறந்துவிடாவிட்டால், ஐந்து இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி காய்ந்து கருகிவிடுமோ என்று உழவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு, மன உளைச்சலில் உள்ளார்கள்.

தமிழ்நாட்டு அமைச்சரோ, எந்த உறுதியும் உடனடி நிவாரணமும் பெறாமல் ஒப்புக்கு மனு கொடுத்துத் திரும்பியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை ஒரு தடவை கூடக் கர்நாடக அரசு, தானே முன்வந்து திறந்து விட்டதில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசை வற்புறுத்தி, தனது மேற்பார்வையில் தண்ணீர் திறந்துவிட்டதும் இல்லை! தமிழ்நாட்டில் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. ஆட்சிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தண்ணீரைப் பெற்றுத் தந்ததும் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக பருவம் தவறிய பெருமழை பெய்ததால், மிகை வெள்ளம் வெளியேறி, மேட்டூர் அணையை நிரப்பியிருக்கிறது அல்லது தமிழ்நாட்டுப் பாசனத்திற்குத் தண்ணீர் தந்திருக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இப்போது தலைமை தாங்கும் ஹல்தர், ஏற்கெனவே பணி நிறைவு பெறும் வரை ஒன்றிய அரசின் நீராற்றல் துறையின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். சட்டவிரோதமான முறையில், கர்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்ட திட்டம் அறிவித்தபோது, அதற்கான திட்ட முழு அறிக்கையை (Detailed Project Report – DPR) தாக்கல் செய்யுமாறு கோரிப் பெற்றவர் இதே ஹல்தர்தான். கர்நாடக அரசின் ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டு விளக்க அறிக்கையை ஹல்தர் தலைமையிலான நீராற்றல் துறைக்கு அனுப்பி வைத்தது. ஹல்தர் அவ்வறிக்கையை ஏற்றுக் கொண்டு, காவிரி மேலாண்மை ஆணையம் அதை விவாதித்து ஏற்க வேண்டும் என்பதற்காக, அதற்கு அனுப்பி வைத்தார்.

பணி நிறைவு பெற்ற பின், அதே ஹல்தர் தான் இப்பொழுது காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக இருக்கிறார். இவர் ஒரு தடவை கூட உச்ச நீதிமன்றம் மாத வாரியாகத் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெற்றுத் தந்ததில்லை. அதற்குரிய நடவடிக்கை எடுத்ததில்லை. ஆனால், காவிரி ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கொடுப்பதை நிகழ்ச்சி நிரலில் சேர்த்து வருகிறார்.

இப்பொழுது தமிழ்நாட்டின் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுமக்கள் மனு கொடுப்பதுபோல் ஒரு மனுவைப் புதுதில்லியில் கொடுத்துவிட்டு வந்துள்ளார். கர்நாடக துணை முதல்வராகவும், அம்மாநில நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ள திரு. டி.கே. சிவக்குமார் ஒளிவுமறைவின்றி அண்மையில் புதுதில்லியில் செய்தியாளர்களிடம், காவிரி மேலாண்மை ஆணையம் திறந்துவிடச் சொன்னாலும், கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடாது; எங்கள் அணைகளில் மிகவும் குறைவாக தண்ணீர் இருக்கிறது என்று வெளிப்படையாக அறிவித்தார்.

கர்நாடகத்தில் உண்மையிலேயே வழக்கத்தை விடக் காவிரி நீர் குறைவாக இருந்தால், அதைத் தமிழ்நாட்டுடன் பகிர்ந்து கொள்வதற்குக் காவிரித் தீர்ப்பாயம், பற்றாக்குறை காலப் பகிர்வுத் திட்டத்தையும் (Distress Formula) அறிவித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. அதன்படி, தண்ணீரைப் பெறத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அதற்கு முன், கர்நாடக அணைகளிலும், அம்மாநிலம் புதிதாக உண்டாக்கிக் கொண்ட மற்ற நீர்நிலைகளிலும் இப்பொழுது தண்ணீர் உண்மையில் எவ்வளவு இருக்கிறது என்று கண்டறியத் தமிழ்நாட்டிலிருந்து தகுதியுள்ள ஓர் ஆய்வுக்குழுவைத் தமிழ்நாடு அரசு அனுப்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படாத நிலையில், தாக்கப்பட்டதாக ஒரு வதந்தியை வடநாட்டார் பரப்பிவிட்டபோது, பீகார் அரசு தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்குழு அனுப்பி ஊர் ஊராக புலம் பெயர்ந்த மக்களையும், தமிழ்நாட்டு அதிகாரிகளையும் விசாரித்தது. அதற்குத் தமிழ்நாடு அரசு முழுமையாக ஒத்துழைத்தது. இப்பொழுது கர்நாடகத்தில் உள்ளது தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரசின் ஆட்சி! எனவே, உடனடியாக ஒரு வல்லுநர் குழுவைக் கர்நாடகத்திற்கு அனுப்பி, காவிரி நீர் நிலையின் உண்மை நிலையை அறிந்து, அதற்கேற்ப கோரிக்கை வைக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல், கணக்குக் காட்டுகின்ற முறையில் புதுதில்லிக்குப் போய் துரைமுருகன் மனு கொடுத்ததை ஏற்கும் மனநிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களின் உழவர்கள் இல்லை! அத்துடன், செயல்படாத காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை நீக்கிவிட்டு, தமிழ்நாடு அரசும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தகுதியுள்ள ஒருவரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அமர்த்தும்படி தமிழ்நாடு அரசு இந்திய அரசுக்குக் கோரிக்கை வைக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றி டெல்டா மாவட்டக் குறுவைப் பயிரையும், அடுத்த சம்பா சாகுபடியையும் பாதுகாக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response