ரேசன் பொருட்கள் அளவை குறைத்து வஞ்சனை – மோடி அரசு மீது வெளிப்படைக் குற்றச்சாட்டு

தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது….

சர்க்கரை, உளுந்தம் பருப்பு, பாமாயில், மைதா மாவு, ரவை உள்ளிட்ட 5 வகையான பொருட்களை பொதுச் சந்தைகளில் விலைக்கு வாங்கி ஏழை, எளிய மக்களுக்கு ரேசன் கடைகளில் மானிய விலையில் கலைஞர் தலைமையிலான அரசு வழங்கியது. ஆனால், இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் உளுந்தம் பருப்பு, ரவை வழங்கும் அளவைக் குறைத்து விட்டனர்.

தற்போது நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி இருந்தாலும், தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற பொருட்கள் எல்லாம் வழங்கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்டவைகளை மக்களுக்கு தேவையான அளவு கொடுத்து வருகிறோம்.

ஒன்றிய அரசால் தமிழ்நாட்டுக்கு 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை மாதந்தோறும் 13,485 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. மே 2021 முதல் மாதம் ஒன்றுக்கு 30,647 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஜூன் 2022 முதல் மாதம் ஒன்றுக்கு 8,532 மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், அரிசிக்குப் பதிலாக கோதுமை வேண்டும் என்று கேட்டால் கொடுக்க முடியவில்லை. இப்போது, நாங்கள் ஒன்றிய அரசுக்கு மாதம்தோறும் 15,000 மெட்ரிக் டன் கூடுதலாக கோதுமை ஒதுக்கீடு வேண்டும் என்று கடிதம் எழுதி இருக்கிறோம்.

ஒன்றிய அரசு ரேசனில் வழங்குவதற்கான மண்எண்ணெய் ஒதுக்கீட்டையும் குறைத்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விலையில்லாமல் 30 இலட்சம் பேருக்கு எரிவாயு கொடுத்த காரணத்தினால்தான், மண்எண்ணெய் ஒதுக்கீட்டைக் குறைத்திருக்கிறார்கள். அதேநேரம், மற்ற மாநிலங்களில் எரிவாயு இணைப்பு கொடுத்தாலும், அங்கெல்லாம் மண்எண்ணெய் கூடுதலாகக் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழ்நாடு இன்று வஞ்சிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் ஒன்றிய அரசு, மண்எண்ணெய் அளவை அதிகரித்துத் தர வேண்டும்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, உணவுத் துறையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். ஒரு நெல் மணி கூட மழையில் நனையக்கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நெல் வாங்கினால் அதை அரைத்து பொதுமக்களுக்கு தரமான அரிசியாகக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 376 அரவை ஆலைகளை 747 அரைவை ஆலைகளாக நாங்கள் உயர்த்தி இருக்கிறோம். அனைத்து ஆலைகளிலும் தரமான அரிசி வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்கள் தரமாக இருப்பதைக் கண்காணிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டு 43 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 35 இலட்சத்து 50 ஆயிரம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. வருகின்ற செப்டம்பர் மாதம் முடிவதற்குள் 45 இலட்சம் மெட்ரிக் டன் அதாவது 50 ஆண்டுகளில் இல்லாத அளவாக நெல் கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response