தமிழ்நாட்டின் இறையாண்மை காக்க மு.க.ஸ்டாலினுக்கு பெ.ம யோசனை

“தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி தனியார் துறையில் 75% வேலை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும் என தஞ்சையில் இன்று (08.03.2023) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

முன்னதாக, இச்சந்திப்பை நடத்தக் கூடாதென, தஞ்சை நகரக் காவல் ஆய்வாளர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை அலுவலகத்திற்கு வந்து, மணியரசனிடம் நேரில் வந்து தெரிவித்தார். எனினும், செய்தியாளர் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெற்றது. அதில், பெ.மணியரசன் கூறியதாவது……..

கடந்த சில ஆண்டுகளாக உடைப்பெடுத்த வெள்ளம் போல் வடநாட்டிலிருந்து இந்திக்காரர்கள் அன்றாடம் தமிழ்நாட்டில் குடியேறுகிறார்கள். தமிழ்நாடு உள்ளாட்சி அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள், 25.1.2023 அன்று திருச்சியில் நடந்த மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “ஒரு நாளைக்கு 1000 குடும்பங்கள், 2000 குடும்பங்கள் என்று உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், இராசஸ்தான் மாநிலங்களில் இருந்து வந்து சென்னையில் குடியேறுகிறார்கள். இவர்களால் தி.மு.க.வுக்குத்தான் ஆபத்து. இவர்கள் நமக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்” என்று பேசினார். இப்பேச்சு 26.1.2023 அன்று நாளேடுகளில் வந்தது.

பிழைப்புத் தேடி ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு மக்கள் செல்லும் இயல்பான (Normal) புலம் பெயர்வல்ல இது! திட்டமிட்ட இந்தித் திணிப்பு போல், இந்திக்காரர்கள் திணிப்பு இது! தமிழ்நாட்டை இன்னொரு இந்தி மாநிலமாக்கும் இந்திய ஆட்சியாளர்களின் மற்றும் இந்திக்காரர்களின் வேலைத் திட்டம் இது!

இந்திக்காரர்கள் தாம் தமிழ்நாட்டில் தமிழர்களைப் பல இடங்களில் தாக்கியுள்ளார்கள். திருப்பூர், கோவை – சூலூர் ஆர்.வி.எஸ். பாலிடெக்னிக் மாணவர்கள், சூளகிரி எனப் பல இடங்களில் இந்திக்காரர்கள் தமிழர்களைத் தாக்கியுள்ளார்கள்.

ஈரோட்டில் தமிழ்நாடு காவல்துறையினரையே இந்திக்காரர்கள் தாக்கினார்கள். ஆனால் தமிழர்கள் தமிழ்நாட்டில் இந்திக்காரர்களைத் தாக்கியதாகப் போலியான காணொலிக் காட்சிகளைத் தயாரித்து வெளியிட்டார்கள். இவ்வாறு போலிக் காணொலிகளை வெளியிட்டவர்கள் பெரும்பாலும் பாரதிய சனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இவ்வாறான அவதூறு தொடர்பாக உ.பி. பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் என்பவர் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அவரது போலிச் செய்திகளை, பீகாரின் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ கணக்கு அப்படியே பகிர்ந்தது. பல பா.ஜ.க. பிரமுகர்கள் அவற்றை அப்படியே பகிர்ந்து பரப்பினர். தில்லி மற்றும் பீகாரில் இவ்வேலைகளில் ஈடுபட்ட இந்திக்காரர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சிலரைக் கைது செய்துள்ளது. “தைனிக் பாஸ்கர்” (Dainik Bhaskar) என்ற இந்தி இதழின் ஆசிரியர் மீதும் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர் பா.ச.க. ஆதரவாளர். தமிழ்நாட்டில், பா.ச.க. தலைவர் அண்ணாமலை, வதந்தி பரப்பினார் எனத் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதேவேளை, பா.ச.க.வினர் பீகாரில் சட்டப்பேரவையில் அமளியை உண்டாக்கி, தமிழ்நாட்டில் பீகாரிகள் இன அடிப்படையில் படுகொலை செய்யப்படுவதாகவும், அடித்துப் படுகாயப் படுத்தப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வருகின்றனர். பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், அதிகாரிகள் குழுவையும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுவையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி ஆய்வு செய்ய வைத்துள்ளார்.

பீகார் அரசின் இச்செயல் தமிழ்நாட்டு அரசையும், மக்களையும் இழிவுபடுத்துவதாகும். தமிழ்நாடு அரசின், தமிழ்நாட்டு மக்களின் இறையாண்மையை – தன்மதிப்பைக் கொச்சைப்படுத்துவதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் பீகாரிகளின் இந்த அதிகார ஆக்கிரமிப்புக்கு இணங்கி, அம்மாநில அதிகாரிகளை வரவேற்று, அவர்கள் விரும்பிய இடமெல்லாம் – அவர்களுக்குத் துணையாகச் செல்ல தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளை அனுப்பியது நம்மை நாமே கீழ்ப்படுத்திக் கொள்வதும், தன்மதிப்பற்றதும் ஆகும். அத்தோடு நிற்காமல், தி.மு.க. மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் ஒரு குழுவை பீகாருக்கு அனுப்பி, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரிடம், “தமிழ்நாட்டில் பீகாரிகள் பத்திரமாக வாழ எடுத்துள்ள நடவடிக்கைகள்” குறித்து, வேலை அறிக்கை சமர்பிக்கச் செய்தது, தமிழ்நாட்டை உலக அரங்கில் மேலும் தாழ்வுபடுத்திவிட்டது!

காவிரிச் சிக்கலில், கர்நாடகத்தில் 1991, 2016 ஆண்டுகளில் அங்குள்ள தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது, தாக்கப்பட்டபோது, இப்படித் தமிழ்நாடு குழு, கர்நாடகம் சென்று மேற்பார்வை இட்டதா? முல்லைப் பெரியாறு சிக்கலில் மலையாளிகள், கேரளம் சென்ற தமிழர்களை 2011இல் தாக்கியபோது, தமிழ்நாட்டு ஊர்திகளைத் தகர்த்தபோது, இவ்வாறு குழு அனுப்பிச் செயல்பட்டதா தமிழ்நாடு? 20115இல் ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, தமிழ்நாடு இவ்வாறு செயல்பட்டதா?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான (2021) வாக்குறுதி அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தனியார் துறையில் 75 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு ஒதுக்கிட சட்டம் இயற்றுவோம் என்று கூறியது. அதை மு.க. ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என்று, வேலை இல்லாமல் தவிக்கும் 75 இலட்சம் தமிழர்கள் ஆண்களும் – பெண்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அதைச் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறது. கடந்த பத்தாண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசின் அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அனைத்திலும் 95 விழுக்காடு வேலை இந்திக்காரர்களுக்கே வழங்குகிறார்கள். சூழ்ச்சியாக, தமிழர்களைப் புறக்கணிக்கிறார்கள். இதில் தமிழர்களுக்குரிய பங்கு கிடைக்கச் செய்ய தி.மு.க. அரசு, கடந்த 22 மாதங்களாக துரும்பைக் கூட அசைக்கவில்லை! இவற்றில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வேண்டும்.

மிகையாக வெள்ளப் பெருக்குபோல் தமிழ்நாட்டு வேலைகளில் சேர்ந்து குடியேறும் இந்திக்காரர்களைத் தடுக்கவில்லை என்றால், தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக இல்லாமல் இந்திக்காரர்களின் இன்னொரு மாநிலமாக ஆகிவிடும்.

இந்த அபாயத்தைத் தடுக்க அருணாச்சலப்பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர் மாநிலங்களில இருப்பது போல், தமிழ்நாட்டிற்கு பிற மாநிலத்தவரை அனுமதிப்பது அல்லது மறுப்பது தொடர்பான “உள்அனுமதி அதிகாரம்” (Inner Line Permit) கோரிப் பெற தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு பெ.மணியரசன் கூறினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா.வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

Leave a Response