தீர்ப்பில் பாதகமான அம்சங்கள் – எடப்பாடி கவலை

அதிமுக உட்கட்சிச் சண்டை காரணமாக
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இந்தத்தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தனர்.

அதில், “ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்ட வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது. உரிய சட்டவிதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டனவா? என்பது குறித்தும் ஆராயப்பட்டன. அதன் அடிப்படையில்,அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பை உறுதி செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும்.

மேலும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக எந்த கோரிக்கையும் எங்கள் முன்பு வைக்கப்படவில்லை. எனவே, தீர்மானங்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப் போவதில்லை. எதிர்காலத்தில் இது தொடர்பாக வழக்கோ அல்லது தேர்தல் ஆணையத்தில் முறையீடு யாரேனும் தாக்கல் செய்தால் அப்போது அதன் மீதான நடவடிக்கைகள் சட்டப்படி தொடரும்.

அதேபோல் பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கு மீதான விசாரணை நடைபெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனக்கூறி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் இடையீடு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்தத் தீர்ப்பை எடப்பாடி தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

ஆனால், இது அவர்களுக்கு முழுமையான வெற்றி அல்ல என்று சட்டவல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்தத்தீர்ப்பில், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக வழக்கு தொடரலாம் என்பதும் கீழமை நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகள் தொடரலாம் என்பதும் எடப்பாடி அணிக்குப் பாதகமான அம்சங்கள் என்று சொல்கிறார்கள்.

இதனால், மீண்டும் மீண்டும் நீதிமன்றங்களில் வழக்குகள் நடந்துகொண்டே இருக்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

Leave a Response