ஐபிஎல் 2023 – சென்னை அணியில் 2 சிங்கள வீரர்கள் இரசிகர்கள் அதிருப்தி

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 16 ஆவது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் டிசம்பர் 23 அன்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு பெரிய குறையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் தலைநகரமாக விளங்கும் சென்னையை மையமாக வைத்துத் தான் இந்த ஐபிஎல் அணி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் தமிழக வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்புக் கிடைக்கும் என இரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனென்றால் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் டிஎன்பிஎல் தொடரிலிருந்து ஏகப்பட்ட வீரர்கள் வருகின்றனர்.
இவர்களில் யாராவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பெருமையாக இருக்கும்.

ஆனால் நடப்பு ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தமிழக வீரரைக் கூடத் தேர்வு செய்யாமல் இருந்தது இரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது.

சிஎஸ்கே விடுவித்த நாராயணன் ஜெகதீசன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கக் கூடியவர். தோனிக்கு அடுத்ததாக அவரை கூட பிளேயிங் லெவனில் வைத்து விளையாடி இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் இம்முறை ஜெகதீசன் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

விஜய் ஹசாரே கோப்பையில் 5 சதம், ஒரு போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜெகதீசனை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்காமல் கைவிட்டது. இதேபோன்று தமிழக ஆல்ரவுண்டர் பாபா இந்திரஜித், சஞ்சய் யாதவ் சிஎஸ்கே அணியால் எடுக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களையும் சிஎஸ்கே கைவிட்டது. ஒரு காலத்தில் அஸ்வின், முரளி விஜய், பத்ரிநாத், பாலாஜி என தமிழக வீரர்கள் சிஎஸ்கே அணியில் முக்கிய அங்கம் வகித்தனர்.
ஆனால் தற்போது சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறவில்லை.

ஏலத்தில் கூட சிஎஸ்கே தமிழக வீரர்களைத் தேர்வு செய்வதில்லை. இது இரசிகர்களிடையே ஏமாற்றத்தையும் ஆத்திரத்ததையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது இருக்கும் சிஎஸ்கே அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறவில்லை.

சிங்கள வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது தமிழக உணர்வைப் பாதிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு ஆண்டுகளாக இங்கு உள்ள தமிழ் இயக்கங்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். ஆனால் அதையும் மீறி இம்முறை 2 இலங்கை அணி வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லாதது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக வீரர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாக இரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

Leave a Response