தமிழ்நாடு ஆளுநரின் ஊழல் – வெளிப்படுத்தும் அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி மீது ஐயம்கொண்டு செய்தி வெளியிட்டிருக்கிறார். அதில்….

கோவை உப்பிலிப்பாளையத்தைச் சேர்ந்த பொறியாளர் சங்கர் ஆன்லைன் சூதாட்டத்தில் இலட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய ஆள்கொல்லியாக மாறி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 37 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 15 நாட்களில் மட்டும் 5 பேர் ஆன்லைன் சூதாட்டத்திற்குப் பலியாகியுள்ளனர்.

இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமும் வலியுறுத்துகிறது. இது குறித்து அமைச்சரே நேரில் சந்தித்து வலியுறுத்தியும் ஆளுநர் அசைந்து கொடுக்காமல் இருப்பது சரியல்ல. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது.

ஆன்லைன் சூதாட்டத்தடைச் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு இன்றுடன் 59 நாட்களாகின்றன. ஆளுநர் கோரிய அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்ட பிறகும் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும் ஏற்படுத்துகிறது!

ஆளுநரின் அலட்சியத்தையும், காலதாமதத்தையும் தமிழக அரசு பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக ஆளுநரைச் சந்தித்து ஆன்லைன் சூதாட்டத்தடைச் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response