குமுதம் குழும இதழ்கள் வரதராசனுக்கே சொந்தம் – முடிவுக்கு வந்தது பல்லாண்டு சிக்கல்

தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருக்கும் வார ஏடு குமுதம். தற்கால மின்னணுக் காலத்தில் அதன் தாக்கம் குறைந்திருந்தாலும் ஒவ்வொரு வாரமும் அந்த இதழை வாங்கிப்படிக்கத் துடிப்போர் இன்றும் உண்டு.

அவ்விதழ் நிர்வாகத்தை முப்பதாண்டுகளுக்கும் மேலாகப் பார்த்துக் கொண்டிருப்பவர் வரதராசன்.அவருக்கும் குமுதத்தின் பெருமளவு பங்குகளுக்குச் சொந்தக் காரரான மருத்துவர் ஜவகர் பழனியப்பனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் கடந்த பத்தாண்டுகளாக நீதிமன்றங்கள், அந்நியச் செலாவணி மன்றங்கள் ஆகியனவற்றில் பல்வேறு வழக்குகள் நடந்துவந்தன.

இதனால் குமுதம் மற்றும் அந்நிறுவனத்திலிருந்து வரும் மற்ற இதழ்களின் வீச்சு குறைந்துகொண்டே வந்தது.

வாசகர்களுக்கும் மற்ற இதழாளர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வுக்கு அண்மையில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

குமுதம் மற்றும் அந்நிறுவனத்திலிருந்து வரும் இதழ்கள் அனைத்தும் வரதராசனுக்கே சேரும் என்று நீதிமன்றத்தின் மூலம் முடிவாகியிருக்கிறது.

குமுதம் குழும இதழ்கள் இயங்கி வந்த புரசைவாக்கத்திலுள்ள கட்டிடம் மருத்துவர் ஜவகர்பழனியப்பனுக்குச் சேரும் என்று முடிவாகியிருக்கிறது.

இதனால், விரைவில் குமுதம் குழும இதழ்கள் புதிய முகவரியிலிருந்து வெளியாகும்.

அதுமட்டுமல்ல, இருவருக்கிடையே இருந்த போட்டியால் நலிவுற்றிருந்த குமுதம் இனிமேல் புதுப்பொலிவுடன் மீண்டும் தமிழக மக்களின் மனங்களை வெல்லும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

நல்லது நடந்தால் நல்லது.

Leave a Response