அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நடந்ததென்ன ? – முழுவிவரம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது சமூகநீதிக் கொள்கைக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தை அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் புறக்கணித்தன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில், திமுக சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ரகுபதி, எம்பி வில்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.செல்வப்பெருந்தகை, அசன் மவுலானா (காங்கிரசு), திருமாவளவன் எம்பி, ரவிக்குமார் எம்பி (விடுதலைச் சிறுத்தைகள்), வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, வழக்கறிஞர் பாலு (பாமக), நாகை மாலி, சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), முத்தரசன், பெரியசாமி (இந்திய கம்யூனிஸ்ட்), வைகோ, சதன் திருமலைகுமார் (மதிமுக), ஜவாஹிருல்லா, அப்துல்சமது (மனிதநேய மக்கள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), சின்ராஜ், சூர்யமூர்த்தி (கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி) ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துகளைக் கூட்டத்தில் பதிவு செய்தனர்.

அனைத்துக்கட்சிக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது……

நூற்றாண்டு காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வந்த சமூகநீதிக் கொள்கைக்கு இன்று பேராபத்து சூழ்ந்திருக்கிறது. சாதியின் பேரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை அதில் இருந்து மீட்டு, அவர்களுக்குக் கல்வியையும், வேலைவாய்ப்பையும் கொடுத்து அனைத்திலும் முன்னேற்றுவதற்கு பயன்படும் மாபெரும் தத்துவம்தான் சமூகநீதிக் கொள்கை.

1920 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தை இரட்டையாட்சி முறைப்படி ஆட்சி செலுத்திய நீதிக்கட்சியின் ஆட்சியானது, வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை ஆணையைப் பிறப்பித்தது. காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அதன்பிறகுதான் பள்ளி,கல்லூரிகளுக்குள் நுழைந்தார்கள். அப்படிக் கிடைத்த கல்வியின் மூலமாக வேலைவாய்ப்பை அடைந்தார்கள்.

1920 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரையிலான முப்பதாண்டு கால முன்னேற்றத்துக்கு வேட்டு வைக்கும்விதமாக கம்யூனல் ஜி.ஓ. ஆணையானது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் 1950 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

தமிழ்நாட்டில் பெரியார் போர்க்கொடி தூக்கினார். அண்ணா தமது வலுவான வாதங்களை எடுத்துவைத்தார். அப்போது காமராஜர் தமிழ்நாட்டின் போராட்ட நிலைமைகளை டெல்லிக்கு எடுத்துச் சொன்னார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக அமைந்த அம்பேத்கர் அப்போது சட்ட அமைச்சராக இருந்தார். ஜனநாயக தன்மைகளை உணர்ந்த ஜவகர்லால் நேரு அப்போது இந்திய பிரதமராக இருந்தார். இவை அனைத்தும் இணைந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தமாக ஏற்படுத்தப்பட்டது.

‘‘சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்த சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது’’ என்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம். இந்தத் திருத்தத்துக்குக் காரணம், happenings in madras என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார் அன்றைய பிரதமர் நேரு.

சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டிய ஒன்று என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரையறை. அதற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அளவுகோலைப் புகுத்த நினைத்தது ஒன்றிய அரசு.

அதன்படி ஒரு சட்டத்தை 2019 ஆம் ஆண்டு செய்தார்கள். அந்தச் சட்டத்தைத்தான் தற்போது உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வில் மூன்று நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளார்கள். சமூகத்தில் முன்னேறிய சாதியில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதுதான் ஒன்றிய பாஜக அரசினுடைய திட்டம். இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கு முரணானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது.

முதல் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது எக்னாமிக்லி என்ற சொல்லையும் சேர்க்கச் சொல்லி சில உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். இதனை பிரதமர் நேரு ஏற்கவில்லை. சட்ட அமைச்சர் அம்பேத்கரும் ஏற்கவில்லை. எக்னாமிக்லி என்ற சொல்லைச் சேர்க்கலாமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு ஆதரவாக 5 வாக்குகள் மட்டுமே விழுந்தது. எக்னாமிக்லி என்ற சொல்லைச் சேர்க்கக் கூடாது என்று 243 வாக்குகள் விழுந்தன. இப்படி இந்திய நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட கருத்துதான் பொருளாதார அளவுகோல்.

இன்றைக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் மூன்று நீதிபதிகள் ஆதரித்துள்ளார்கள். ஆனால், 1992 ஆம் ஆண்டு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வானது பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளதை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பானது 16-11-1992 அன்று வழங்கப்பட்டது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அப்போது வழங்கிய தீர்ப்பில், ‘’பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு அரசின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளவை பொருத்தமில்லாதது” என்று கூறப்பட்டுள்ளது.

எனவேதான், சமூகநீதிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும், உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மை அமர்வுக்கும் எதிரானதாக ஒன்றிய அரசின் சட்டத்திருத்தம் அமைந்துள்ளதை நாம் எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்வதைத் தடுப்பதாக யாரும் இதனைக் கருதத் தேவையில்லை. ஏழைகளுக்கான எந்தத் திட்டத்தையும் நாம் தடுக்க மாட்டோம். ஆனால், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையை மடைமாற்றும் திருகுவேலையை இடஒதுக்கீடு அளவுகோலாக மாற்றக் கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள்.

உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஓ.சின்னப்ப ரெட்டி ஒரு தீர்ப்பின் போது Reservation is not a poverty alleviation scheme என்று குறிப்பிட்டார். இந்திய அரசியலமைப்பின் 103 ஆவது திருத்தம் என்பது சமூகநீதிக்கு எதிரானது; அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரானது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது; உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கும் எதிரானது; ஏழைகளுக்கு எதிரானது என்பதால் நாம் எதிர்க்க வேண்டியதாக உள்ளது.

இந்தச் சட்டத்திருத்தத்தை ஏற்றுக் கொண்டால் காலப்போக்கில் சமூகநீதித் தத்துவமே உருக்குலைந்து போகும். ‘socially and educationally backward’’ என்பதையே பின்னர் எடுத்து விடுவார்கள். எக்னாமிக்லி என்பதையே அனைத்துக்கும் கொண்டு வந்துவிடுவார்கள். அதனால்தான் நாடாளுமன்றத்தில் நாங்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தோம். எதிர்த்து வாக்களித்தோம். தமிழகத்தைப் பொறுத்தவரையில், தேசிய இயக்கமாக இருந்தாலும், பொதுவுடமை இயக்கமாக இருந்தாலும், மற்ற எந்த கொள்கை நோக்கத்தோடு உருவான இயக்கங்களாக இருந்தாலும் சமூகநீதித் தத்துவத்தைப் பொறுத்தவரையில், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, ஆதரிக்கும் இயக்கமாகவே கடந்த காலத்தில் செயல்பட்டு வந்துள்ளீர்கள் என்பதை நானும் அறிவேன், இந்த நாட்டு மக்களும் நன்கறிவார்கள். அரசின் அழைப்பினை ஏற்று வருகை தந்துள்ள உங்கள் அனைவர்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…

முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் எனப்படுவது – இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதித் தத்துவத்துக்கு முரணானது என்பதாலும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், ஏழைகளில் சாதிப்பிரிவினையைக் கற்பித்து பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும் நாங்கள் அதனை நிராகரிக்கிறோம்.

இதுகுறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்போது, தமிழ்நாடு அரசும் உரிய முறையில் சமூகநீதியையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துகளை வலுவாகப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Response