சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை நீக்கிவிட்டு இராணிமங்கம்மாள் பெயரா? – பெ.ம கடும்எதிர்ப்பு

தமுக்கம் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை நீக்காதீர்,இனப்பாகுபாடு கூடாது, தமிழ்நாடு முதல்வர் தலையிட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…..

மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான தமுக்கம் திடலில் உள்ள தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடிக்கப்பட்டு மதுரை பொலிவுறு நகர் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் புதுப்பிக்கப்பட்ட தமுக்கம் கலையரங்கத்தைத் திறந்து வைத்தார். பழைய கலையரங்கக் கட்டிடத்தின் உள்ளே சங்கரதாஸ் சுவாமிகள் உருவப் படமும், பெயரும் தாங்கிய பெயர்ப் பலகை இருந்தது. ஆனால், புதிய கட்டிட நுழைவு வாயிலிலோ அல்லது கட்டிட அரங்கத்திற்குள்ளோ சங்கரதாஸ் சுவாமிகளின் உருவப்படமும், பெயரும் இல்லை.

எந்த ஒரு பழைய கட்டிடமும் இடிக்கப்பட்டு புதிதாக கட்டும்போது, முன்பு என்ன பெயர் இருந்ததோ அதையே வைப்பதுதான் மரபு. ஆனால், மாறாக அங்கு “மதுரை மாநாட்டு மையம்” என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.

இப்போது சில தெலுங்கு அமைப்புகள், தெலுங்குப் பரம்பரையைச் சேர்ந்த இராணி மங்கம்மாள் பெயரை தமுக்கம் கலை அரங்கத்திற்கு சூட்ட வேண்டுமென்று அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. மதுரையில் அதற்காக உண்ணாநிலைப் போராட்டம் கூட நடத்தியுள்ளனர்.

மதுரை தொடர்வண்டி நிலையம் அருகில் இராணி மங்கம்மாள் பெயரில் மிகப்பெரிய மாளிகை ஒன்று உள்ளது. இப்போது, காந்தி அருங்காட்சியகத்திற்கும், சங்கரதாஸ் சுவாமிகள் கலை அரங்கத்திற்கும் மங்கம்மாள் பெயரை வைக்கக் கோருவது இனப்பாகுபாடும், தெலுங்கினத் திணிப்பும் ஆகும்!

சங்கரதாஸ் சுவாமிகள் என்பது வெறும் பெயர் அல்ல. 19ஆம் நூற்றாண்டில் தமிழ் நாடக உலகின் மறுமலா்ச்சித் தந்தை என்று அனைத்துத் தமிழர்களாலும் போற்றப்படுபவர். “தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா” என்ற நாடகக் குழுவை மதுரையில் தோற்றுவித்து புகழ் பெற்று விளங்கினார். அக்காலத்தில் இவர் உருவாக்கிய சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி சரித்திரம், வள்ளித் திருமணம், அரிச்சந்திர மயான காண்டம், கோவலன் சரித்திரம் போன்ற நாடகங்கள் பட்டிதொட்டியெங்கும் பரவின. தமிழர் நாடக மரபை சமகாலத்திற்கேற்ப வளர்த்தன.

1967ஆம் ஆண்டு சென்னை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சார்பில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா குழுத் தலைவராகத் தமிழவேள் பி.டி. இராசன் செயல்பட்டார். இதனையடுத்து, 1968ஆம் ஆண்டு சென்னை சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்ற நிறுவனரும், சட்டமன்ற மேலவை உறுப்பினருமான ஒளவை தி.க.சண்முகம் மற்றும் மதுரை நகராட்சி முயற்சியால் தமுக்கம் திடலுக்கு வெளியே சங்கரதாஸ் சுவாமிகள் சிலை நிறுவப்பட்டது.

சங்கரதாஸ் சுவாமிகள் சிலையை அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் திறப்பதாக இருந்தது. அவர் நோயுற்று இருந்த காரணத்தால் அவர் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.நரசிம்மன் அவர்கள் சிலையைத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் “சிலம்புச் செல்வர்” ம.பொ. சிவஞானம், தமிழவேள் பி.டி. இராசன், நாடகக் கலை நாயகர்கள் ஒளவை தி.க.சண்முகம், தி.க.பகவதி, டி.எஸ்.சிவதாணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வையொட்டி அப்போது நாடகங்கள் அதிகமாக நடத்தப்பட்டு வந்த தமுக்கம் கலையரங்கத்தின் பெயர் “சங்கரதாஸ் சுவாமிகள் கலையரங்கம்” என்று பெயர் சூட்டப்பட்டது.

மதுரையில் நாடகக் குழுவை உருவாக்கி, நாடகக் கலைக்குப் புத்துயிர் தந்த காரணத்தால்தான், அன்றைக்குத் தலைவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு சிலை எழுப்பி, கலையரங்கத்திற்கு அவர் பெயர் சூட்டினார்கள்.

மதுரைக்குப் பெருமை சேர்த்த சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை புதுப்பிக்கப்பட்ட கலையரங்கத்திற்கு சூட்டாமல் இருப்பது, ஒரு சூழ்ச்சியோ என்ற ஐயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இச்செயல் அவரை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்க் கலை உலகை அவமதிக்கும் செயலாகும்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இச்சிக்கலில் தலையிட்டு, மதுரை தமுக்கம் கலையரங்கத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் தொடரும்படியும், நிலைக்கும்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response