எவ்வளவு படையெடுப்புகள் வந்தாலும் தமிழ்மொழி சிதையாது- குன்றக்குடிபொன்னம்பல அடிகள் உறுதி

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி சார்பில் ஈரோட்டில் டிசம்பர் 27. 2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “செம்மொழித் தமிழ் வளர்ச்சிக்கு சமயங்களின் பங்களிப்பு’ எனும் இலக்கியக் கருத்தரங்குக்கு தலைமை வகித்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது:

தமிழ் செம்மொழியாக மிளிர வேண்டும் என்பதற்காக சமயங்கள் ஆற்றியிருக்கும் பங்களிப்பு அபரிமிதமானது. மகா சன்னிதானமாகத் திகழ்ந்த குன்றக்குடி அடிகளாருக்கு குன்றக்குடிக்கு அடுத்தபடியாக பிடித்த ஸ்தலமாக ஈரோடுதான் விளங்கியது.

இங்குதான் பெரியாரும், மகா சன்னிதானமும் ஒருங்கே கூடிப் பேசினார்கள். ஆன்மிகத்தளத்தில் திருப்பணியை நீங்கள் செய்யுங்கள், பகுத்தறிவுத் தளத்தில் பணிகளை நான் செய்கிறேன் என்று மகா சன்னிதானத்திடம் கூறியவர் பெரியார்.

ஒருமொழி செம்மொழியாக இருப்பதற்கு தொன்மை, தனித்தன்மை, பொதுப்படைப்பு, பண்பாடு, பிறமொழி தாக்குதலால் பாதிக்கப்படாமல் இருத்தல், உயர் சிந்தனை, மொழிக்கோட்பாடு உள்பட 11 கோட்பாடுகள் இருக்க வேண்டும் என்று மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த அனைத்துக் கோட்பாடுகளையும் இயல்பாகப் பெற்றிருப்பது தமிழ் மொழி. தொன்மையான சிறப்பு தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. தமிழர்களின் அகத்தையும், புறத்தையும் பேசியது ஆன்மிகம். மரணத்தை தள்ளிப்போடும் மருந்தான நெல்லிக்கனி கிடைத்தபோது, அருந்தமிழ் மூதாட்டியான ஒளவையார் நீண்ட காலம் வாழ்ந்து அவர் மூலமாக தமிழ் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று அதியமான் விரும்பினான்.

இலக்கியம், ஆன்மிகம் மூலமாக மொழி வாழ வேண்டும் என்று வாழ்ந்தவர்கள் அன்றைய மன்னர்கள். அறியாமையின் ஆணி வேர் கல்லாமை. அதை நீக்கும் அரும்பணியை தமிழ்தான் செய்தது. தமிழ் மொழிக்கு எத்தனை தடங்கல்கள் வந்தாலும், அதையும் தாண்டி தனித்தன்மை மாறாமல் இருப்பதே செம்மொழியின் சிறப்பாகும்.

எந்த சமயமாக இருந்தாலும் மொழியைத்தான் நேசிக்க வேண்டும் என ஜி.யூ.போப் கூறியுள்ளார். ஜி.யூ.போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். எந்த எழுத்தாக இருந்தாலும் திருவாசகத்தையே போப் மேற்கோள் காட்டி எழுதுவார்.

சமயத்தைத் தாண்டி எல்லா மதத்தையும் நேசித்தது தமிழ் மொழி. எல்லோரையும் ஈர்க்கும் வல்லமை கொண்டது தமிழ் மொழி. வாழ்க்கைக்கான இலக்கியத்தைப் பேசிய ஒரே மொழி தமிழ் மட்டும்தான். எத்தனை படையெடுப்புகள் வந்தாலும், சிதையாமல் இருப்பது தமிழ் மொழி என்றார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கில் “சைவம்’ என்ற தலைப்பில் புதுவை தமிழ்ப் பேராசிரியர் கிருங்கை சேதுபதியும், “வைணவம்’ என்ற தலைப்பில் சென்னை தமிழ்ப் பேராசிரியர் ராமன், “இஸ்லாம்’ என்ற தலைப்பில் மதுரை தமிழ்ப் பேராசிரியர் சாகுல் அமீது, “கிறிஸ்துவம்’ என்ற தலைப்பில் அருட்தந்தை அமுதன் அடிகள், “சமணம்’ என்ற தலைப்பில் புதுவை தமிழ்ப் பேராசிரியர் அசோக்குமாரன், “பெளத்தம்’ எனும் தலைப்பில் குருஞானாம்பிகை ஆகியோர் பேசினர்.

ஈரோடு செங்குந்தர் கல்வி அறக்கட்டளைச் செயலாளர் எஸ்.சிவானந்தன் வரவேற்றார். அறக்கட்டளைத் தலைவர் எஸ்.சிவப்பிரகாசம், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் சுந்தர ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரித் தாளாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

Leave a Response