
முனைவர் மா.நன்னன் எழுதிய ‘‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’’ நான்காம் வியல்பதிப்பு நூல் வெளியீட்டு விழா ராஜா அண்ணாமலைபுரம், ராஜரத்தினம் கலையரங்கில் டிசம்பர் 26. 2015இல் நடந்தது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்தியமந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
முதல் நூலை நூலாசிரியர் நன்னன் வெளியிட, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
தமிழைத் தமிழாக எழுத வேண்டும் என்று 13 நூல்களை நன்னன் எழுதியிருக்கிறார். தமிழ்படும்பாடு என்று 9 நூல்களை எழுதியிருக்கிறார். இதற்கு தமிழராய் நாம் பெருமைகொள்ள வேண்டும். நம்முடைய தலைவர் கருணாநிதியிடத்தில் மிகுந்த அன்பு கொண்டவர். பாரதிதாசன் மீது தீவிர பற்றுக்கொண்டவர். தொடக்கக்கல்வி, உயர்நிலைக்கல்வி என்று தனது பணியைத் தொடங்கி பேராசிரியராக உயர்ந்தவர். அவர் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.
திராவிட இயக்க உணர்வை ஊட்டி தமிழுக்குத் தொண்டு செய்து வருபவர். தமிழ் மொழியை வளர்ப்பது, தமிழில் உள்ள பிழையைத் திருத்துவதை தன்னுடைய கடமையாகக் கொண்டு தொடர்ந்து தமிழ்ப் பணியாற்றி வருகிறார். அவர் தொகுத்துள்ள இந்த நூலில் அணிந்துரை எழுதியுள்ள தலைவர் கருணாநிதி, தவறான சொல் வழக்கை விலக்கி, சரியான சொற்களைப் பயன்படுத்தவும், தமிழைப் பிழையின்றி எழுதவும் இந்த நூல் உதவும் என்று பாராட்டியிருக்கிறார்.
உதாரணமாக மழை பெய்யலாம், மழை பெய்யக்கூடும் என்பதில் மழை பெய்யும் என்பது தான் நம்பிக்கை என்று குறிப்பிட்டு இருக்கிறார். சமீபத்தில் கூட இங்கே (தமிழகத்தில்) மழை பெய்தது, பெரு மழையாக பெய்யக்கூடும், கனமழையாக இருக்கும், இதுவரையில் இல்லாத அளவுக்கு மழை இருக்கும் என்றெல்லாம் இங்கே நூலாசிரியர் கூறியது போல சர்வதேச வானிலை மையம் எடுத்துரைத்தது. ஆனால் இந்த அரசு அதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டார்கள், பல உயிர்கள் பலியானது. இதற்கெல்லாம் தமிழக அரசு தான் காரணம், அவர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். நம்முடைய நூலாசிரியர் அடுத்த நூலில் இதுபற்றி எழுத வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் மத்தியமந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:–
மாநிலக் கல்லூரியில் எனக்கு பேராசிரியராக நன்னன் இருந்தார். அதை இந்த நேரத்தில் நினைவு கொள்ள விரும்புகிறேன். ‘எண்ணும், எழுத்தும்’ என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் மாணவர்களுக்கு தமிழைக் கற்றுக்கொடுத்தவர். நல்ல உரைநடையில் தமிழை எழுத வேண்டும், தமிழைப் பேச வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இன்றைக்கு தமிழை எழுதும் முறையும், பேச்சு முறையும் மாறுபட்டு விட்டது. பேச்சுத்தமிழுக்கும், எழுத்துத் தமிழுக்கும் இடைவெளி வந்து விட்டது. ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள பொருளை மிக விளக்கமாக அவர் இந்த நூலில் பதிவு செய்துள்ளார். பிறமொழிச் சொற்களை பயன்படுத்தினால் தமிழ் கடனாளியாகி விடும் என்று குறிப்பிடுகிறார். இந்த இடத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. கடன் கொடுப்பதும், கடன்வாங்குவதும் இயல்பானது. பிறமொழிச் சொற்களை வாங்கிப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். வழக்கில் இருந்து மறைந்து போன சொற்களை தேடிப் பிடித்து புதிய சொற்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவாக நூலாசிரியர் முனைவர் நன்னன் ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
இன்றைக்கு தமிழில் உள்ள குறைகளை எடுத்து சொல்லி திருத்துவதற்கு ஆள் இல்லை. காரணம் கேட்டால், வழக்கத்தில் வந்து விட்டது, மக்கள் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் என்று கூறுகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் என்பது எளிமையாக இருக்க வேண்டும். தேவையற்ற சொற்களைப் பயன்படுத்தி தமிழைச் சீர்குலைக்கக் கூடாது. என்னுடைய நூல்களை ஒரு பல்கலைக்கழகத்தில் கூட வாங்கிப் பயன்படுத்தவில்லை என்பது எனக்கு வேதனையான ஒன்று. என்னுடைய பழைய மாணவர்களைக்கொண்டு ஒரு அமைப்பைத் தொடங்க இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் ஆகியோர் தலா ரூ.1,000 கொடுத்து நூலைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஓய்வு பெற்ற நீதிபதி பரஞ்ஜோதி, புதுச்சேரி பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பாண்டுரங்கன், திருவாட்டி பிரேமா அரியரன், தென்மொழி இதழின் ஆசிரியர் மா.பூங்குன்றன், திட்டக்குடி திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்லூரியின் முதல்வர் அழகேசன், பேராசிரியர் விஜயலட்சுமி ராமசாமி, சட்டக்கதிர் இதழின் ஆசிரியர் சம்பத் ஆகியோர் பேசினர்.


