அத்துமீறும் ஆளுநர் அடக்கத்துடிக்கும் சிபிஎம் – கேரள பரபரப்பு

கேரள அரசுக்கு, அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் அரசியல்சட்டத்தைத் தாண்டி நெருக்கடி கொடுத்துவருகிறார். ஒன்றிய பாஜக அரசின் தூண்டுதல் காரணமாகவே அவர் இவ்வாறு செய்வதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தன்னை தரக்குறைவாக விமர்சிக்கும் அமைச்சர்கள் பதவியில் நீடிக்க முடியாது என்று ஏற்கனவே ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கூறியிருந்தார்.

ஆரிப் முகம்மது கான் நேற்று திடீரென முதல்வர் பினராயி விஜயனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில், நிதியமைச்சர் பாலகோபால் தனது விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டுள்ளார். அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு சிபிஎம், சிபிஐ, காங்கிரசு, முசுலிம் லீக் உள்பட பெரும்பாலான கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கிடையே ஆளுநரின் கோரிக்கையை நிராகரித்த முதல்வர் பினராயி விஜயன் நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி பதில் கடிதம் அனுப்பினார்.ஆளுநரின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளாவிட்டாலும், நிதியமைச்சர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று பினராயி விஜயன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு நில்லாமல், ஆளுநருக்கு எதிராக கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தைத் தொடங்கி உள்ளன. சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் நேற்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநரை எதிர்த்துப் போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டம் வரும் நாட்களிலும் தொடரும் என்று இக்கட்சிகள் அறிவித்துள்ளன.

இதற்கிடையே நவம்பர் 15 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு 1 இலட்சம் பேர் கலந்து கொள்ளும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று சிபிஎம் அறிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் வெள்ளையம்பலம் பகுதியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேற்று முதல் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரை அடக்க எந்த எல்லைக்கும் செல்ல சிபிஎம் கட்சி தயாராக உள்ளதாக அக்கட்சித் தொண்டர்கள் துடிக்கின்றனர் என்றும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்களை அமைதிப்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Response