புதுச்சேரி வங்கியில் கட்டாய இந்தித்திணிப்பு – இழுத்துப்பூட்டிய தமிழ்த்தேசியர்கள்

புதுச்சேரி – முதலியார் பேட்டையில் செயல்பட்டு வந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் இந்தித் திணிப்புப் போக்கைக் கண்டித்து, நேற்று (21.10.2022) காலை அவ்வங்கி இழுத்துப் பூட்டப்பட்டது.

12.10.2022 அன்று, அவ்வங்கியில் கணக்கு வைத்துள்ள புதுச்சேரி தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயலாளர் இரா.வேல்சாமி அவ்வங்கிக்குச் சென்றபோது, அங்கு காசாளராகப் பணியாற்றும் இந்திக்காரப் பெண் அவரிடம் இந்தியில் உரையாடினார். வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் இடத்தில் இருக்கக்கூடிய ஊழியர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? எனக் கேட்டு, வங்கி மேலாளர் திரிபாதியிடம் வேல்சாமி முறையிட்டார். அதற்குப் பதில் அளித்த மேலாளர், “எங்களுக்கு இந்தி – ஆங்கிலம் தெரியும். ஆகவே இங்கு வரும் உங்களுக்கு இந்தியோ அல்லது ஆங்கிலமோ கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்” என்று எஜமானர் தோரணையில் அடாவடியாகப் பேசினார். மேலும் அவ்வங்கியின் அனைத்துப் படிவங்களிலும் இந்தியும் ஆங்கிலமும் உள்ளதே தவிர, தமிழில் ஒரு படிவம் கூட இல்லை.

புதுச்சேரி மண் – தமிழ் மண்; தமிழ் மண்ணிலே பணியாற்றக் கூடிய இந்திய அரசு மற்றும் பொது நிறுவன ஊழியர்கள் தமிழ் தெரிந்தவராக இருக்க வேண்டும். தமிழ் தெரியவில்லை என்றால் ஆறு மாதத்திற்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது விதி. எங்கு வேலை பார்க்கிறாரோ அந்த மண்ணின் மொழியைக் கற்றுக் கொண்டு அந்த மண்ணின் மொழியில் பேச வேண்டும். ஆனால், வேண்டுமென்றே தமிழரிடத்தில் தங்கள் தாய்மொழியான இந்தியில் பேசி, அடாவடி செய்கின்றனர்.

பஞ்சாப் வங்கியின் இந்த இந்தித் திணிப்புப் போக்கைக் கண்டித்தும், மேலாளரை மன்னிப்புக் கேட்கக் கோரியும், இன்று (21.10.2022) காலை அவ்வங்கியின் முதன்மை வாயிலை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடந்தது. முன்னதாக வங்கியின் துணை மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் வங்கி சார்பில் எவ்வித உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், வங்கியை தாங்கள் கொண்டு வந்திருந்த பூட்டால் பூட்டிவிட்டு, அதன் வாயிலேயே முழக்கமிட்டு அமர்ந்திருந்தனர். இந்நிலையில், வங்கி மேலாளர் வேல்சாமியிடம் தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டதுடன், 15 நாட்களுக்குள் வங்கி படிவங்கள் அனைத்திலும் தமிழ் இடம் பெறச் செய்வோம் என்று உறுதிமொழி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் இரா வேல்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பேரியக்கத் துணை பொதுச் செயலாளர் க.அருணபாரதி, தமிழர் களம் புதுச்சேரி அமைப்பாளர் கோ.அழகர், நாம் தமிழர் கட்சி பொருளாளர் ம.செ.இளங்கோவன், நாம் தமிழர் தொழிற்சங்கச் செயலாளர் த.இரமேசு, தமிழ்த்தேசியப் பேரியக்க தெற்குக் கிளைச் செயலாளர் அசோக்ராசு, வடக்குக் கிளைச் செயலாளர் தே.சத்தியமூர்த்தி, மணி, ஆறுமுகம், முருகவேல், அரங்கதுரை, நாம் தமிழர் கட்சி மதியழகன், சுதாகர், ஜெகதீசு, எல்&டி கிருட்டிணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டோருக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response