அருணாஜெகதீசன் அறிக்கை – பழ.நெடுமாறன் எழுப்பும் புதிய சந்தேகம்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று விடுத்துள்ள அறிக்கையில்……..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சியில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் உறுதியாகத் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்ச்சி தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை கண்டறியாத மிகக் கொடுமையான நிகழ்ச்சியாகும். 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்படப் பலர் பொறுப்பற்ற வகையிலும், மனிதநேயம் அற்றும் இந்தப் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர் என நீதிபதி அருணா செகதீசன் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

அதேவேளையில் தங்களுக்கு மேலே இருக்கும் உயர் அதிகாரிகளை இவர்கள் சிறிதளவுகூட கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளனர் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் பலர் குறிபார்த்துச் சுடப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இத்தகைய வன்மம் அதிகாரிகளுக்கு ஏற்படுவதற்கு நிச்சயமாக ஏதோ பின்னணி இருக்கவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகத்திற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பதும் முழுமையாக ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response