எடப்பாடி இருக்கும்வரை அதிமுகவைக் காப்பாற்ற முடியாது – பண்ருட்டி இராமச்சந்திரன் அதிரடி

சென்னையில் உள்ள அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு திடீரென சந்தித்துப் பேசினார். அதன்பின், நேற்று காலை 11.30 மணிக்கு அண்ணா பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர், பெங்களூர் புகழேந்தி மற்றும் ஏராளமான தொண்டர்கள் உடன் சென்றனர்.

தற்போது பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக கட்சியில் நீடித்தாலும், எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். சில வாரங்களுக்கு முன் சசிகலாவும் பண்ருட்டி ராமச்சந்திரனைச் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு திடீரென ஆதரவு அளித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது……

என்னைப் பொறுத்தவரை அதிமுக ஒரு முக்கியமான நெருக்கடியைச் சந்திக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும், எடப்பாடியை முன்னிறுத்தி நடந்தது. இந்தத் தேர்தல் அனைத்திலும் தோல்வியைச் சந்தித்தது. ஆகவே, அதிமுக சரிவை நோக்கிச் செல்கிறது. எடப்பாடியை மேலும் வைத்துக் கொண்டு அதிமுகவைக் காப்பாற்ற முடியாது என்பது என்னுடைய எண்ணம். ஒரு இயக்கத்தை நடத்திச் செல்வதற்குரிய தாய்மை எண்ணம் அவரிடம் இல்லை. இதிலிருந்து அதிமுகவைக் காப்பாற்றுவதற்கு நமக்கு இருக்கின்ற ஒரே வழி, இந்த இயக்கத்தில் உள்ள தலைமையை மாற்றுவதுதான். அவர் மாறுவார் என்றால், மாற மாட்டார். ஏனென்றால் எல்லோரும் ஒன்றாவோம், அதன்மூலம் வலுப்பெறுவோம் என்று ஓபிஎஸ் சொன்னாலும் சரி, சசிகலா சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கின்றாரே தவிர, அதில் உள்ள உண்மையைப் புரிந்துகொள்ளவில்லை.

ஆகவே, தொடர்ந்து எடப்பாடி தலைமை நீடிக்குமேயானால் அதிமுகவை அழிவில் இருந்து காப்பாற்ற முடியாது என்பது என்னுடைய அனுபவ கணிப்பு. ஆகையினால், அதிமுகவை மீட்கும் பணியில் ஓபிஎஸ் மற்றும் யார் முன் வந்தாலும் அவர்களை ஊக்கப்படுத்தி, தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அந்த அடிப்படையில்தான் நேற்று முன்தினம் ஓபிஎஸ்சை சந்தித்தபோது சொன்னேன்.

இது தொண்டர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் மூலம்தான் இயக்கத்தைக் காப்பாற்ற முடியும்.
ஒரு அரசியல் கட்சியை மக்கள் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா? என்பதல்ல பிரச்னை. எடப்பாடி அதிமுகவை தலைமை ஏற்று நடத்தியதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் ஆட்சியை இழந்துவிட்டோம். டிடிவி தினகரனைப் பொறுத்தவரை அவரது பேட்டியில் இணைவதைத் தவிர, இணக்கமாக செயல்படுவோம் என்கிறார். சசிகலாவைப் பொறுத்தவரை, தன்னை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது செல்லாது என்று வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு முடியும் வரை அதிலே நீடிப்பார். ஆனால், ஒரு கருத்தில் அவர் உடன்படுகிறார்.

பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும், ஒரு தலைவர் தாய் உள்ளத்தோடு செயல்பட வேண்டும். எல்லாரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்கிறார். காளிமுத்து, ஜெயலலிதாவை கடுமையான வார்த்தைகளைக் கூறி எதிர்த்தார். அவரையே ஜெயலலிதா ஏற்றுக் கொண்டு, சபாநாயகராக, மந்திரியாக ஆக்கினார். ஓபிஎஸ், அதிமுகவில் எல்லாரையும் சேர்த்து தாயுள்ளத்தோடு செயல்பட வேண்டும் என்கிறார். சசிகலா சட்டரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதே நேரம் இரண்டு பேருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அது, எடப்பாடி இருக்கும் வரை அதிமுகவைக் காப்பாற்ற முடியாது என்பதில் இரண்டு பேரும் உறுதியாக இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response