கொரோனாவால் உலகம் முழுக்க பாலியல்சிக்கல் அதிகரிப்பு – மருத்துவர் காமராஜ் அதிர்ச்சி தகவல்

உலக பாலியல் தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் பாலியல் விழிப்புணர்வு பிரச்சார மனிதசங்கிலி, கையெழுத்து இயக்கம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு ஆகியவை நடைபெற்றன.

இந்நிகழ்வையொட்டி உலக பாலியல் சங்க பாலியல் உரிமைல் குழு உறுப்பினர் மருத்துவர் டி.காமராஜ், மீடியா கமிட்டி தலைவரும், அசோசியேட் செயலாளருமான மருத்துவர் கே.எஸ்.ஜெயராணி காமராஜ் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது…..

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துவருவது வேதனை அளிக்கிறது. பாலியல் தொடர்பான விழிப்புணர்வு அனைவருக்குமே மிக அவசியமான ஒன்றாகும்.

இந்த விழிப்புணர்வு, பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் தேவைப்படுகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை நாங்கள் கடந்த 28 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம்.

பாலியல் விசயங்களையும், பாலியல் உணர்வுகளையும் மூடி மூடி வைப்பதால் அனாகரிகமாக வெறித்தனத்தோடு வெளிப்பட்டு பாலியல் வன்முறையாக உருவெடுக்கிறது.

இந்த சமூகக் கொடுமையிலிருந்து மீள முறையான பாலியல் கல்வி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கேரள உயர்நீதிமன்றம், பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இதே போல் தமிழகத்தில் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

கொரோனா தாக்குதலால் உலக நாடுகள் அனைத்திலும் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆகவே, நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.

இவ்வாறு டி.காமராஜ், ஜெயராணி காமராஜ் ஆகியோர் கூறினர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது……

பாலியல் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டியது மிக மிக அவசியமானது. அதனை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் உலக பாலியல் தினம் கொண்டாடப்படுவதும், அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதும் பாராட்டுக்குரியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் பெருமை அடைகிறேன்.

இன்று காலையில் செய்தித்தாள்களில் வந்த செய்திகளில் இரு பெண்கள் திருமணம் செய்துகொண்ட செய்தி முக்கியத்துவம் பெற்றது. அதுவும் இரு வீட்டாரின் பெற்றோர் முன்னிலையில் இந்தத் திருமணம் நடந்துள்ளது. இந்தத் திருமணத்தை நான் ஆதரிக்கிறேன்.

பாலியல் சிறுபான்மையினர் மற்றும் திருநங்கைகள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும். அவர்களது உரிமைகளை அவர்கள் பெறுவதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு வெற்றி மாறன் கூறினார்.

இயக்குநர் பாண்டியராஜன் கூறுகையில், பாலியல் சம்பந்தமான ஒரு குறும்படத்தை நான் தயாரித்தேன். இதற்காக நான் கடுமையான எதிர்ப்புகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கடுமையான முயற்சிக்குப்பிறகு அந்த குறும்படம் அபார வெற்றி அடைந்தது. உலகம் முழுவதிலும் ஏறக்குறைய 2.80 கோடி பேர் யூடியூபில் இப்படத்தை பார்த்துள்ளனர்.

இந்தச் செய்தியை இந்த இடத்தில் கூறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தக் குறும்படம் உடல் ஊனமுற்றோரின் வாழ்வாதாரத்தையும், பாலியல் பிரச்சனைகளையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

நாம் பேசப் பயந்து, பயந்து இருந்த காலங்களையெல்லாம் தாண்டி, இப்போது துணிச்சலாகப் பொது வெளியில் பேசக்கூடிய நிலைக்கு வந்துள்ளோம். அதற்கு இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தான் காரணம் என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், மாநில சட்ட கமிசன் உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருபருமான எஸ்.விமலா பேசியதாவது……

செக்ஸ் என்றாலே தீண்டத்தகாத வார்த்தையாகவும், அசிங்கமாகவும், அநாகரீகமாகவும் நினைக்கிறோம். ஆனால், இன்டர்நெட்டில் அனைத்தும் ஓபனாக இருக்கிறது. சின்னஞ்சிறு குழந்தைகள் இதனால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

உடலுறவு என்றாலே என்னவென்று தெரியாமல், தேவையில்லாமல் கர்ப்பம் அடைகிறார்கள். தகுதி வாய்ந்த மருத்துவர்களைச் சந்திக்க அஞ்சி, மருத்துவ அறிவு இல்லாத போலியானவர்களிடம் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள். இதனால் உயிருக்கே ஆபத்தாகிறது.

நமக்குத் தேவை பாலியல் விழிப்புணர்வு, பாலியல் கல்வி, பாலியல் சமத்துவம், பாலியல் உரிமைகளை நிலைநாட்டுவது, இது தான் இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்விழாவில் தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கத் (ஆக்சி) தலைவர் டாக்டர். ஆர்.பிரேமலதா, சென்னை மெனோபாஸ் சங்கத் தலைவர் டாக்டர். என்.ஹெப்சிபா கிருபாமணி ஆகியோர் பங்கேற்றுக் கருத்துரைகளை வழங்கினர்.

முடிவில் மருத்துவர் நிவேதிதா காமராஜ் நன்றி கூறினார்.

– குணா

Leave a Response