நீட் தேர்வையும் புதிய தேசிய கல்விக்கொள்கையையும் எதிர்ப்பது ஏன்? – மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது……

தமிழ்நாட்டில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இதில் விடுதலைக்கு முன் உருவாக்கப்பட்டவை 2 பல்கலைக்கழகங்கள்தான். ஒன்று, சென்னைப் பல்கலைக்கழகம் 1857 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இரண்டு, சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் 1929 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1947 முதல் 1967 வரையிலான காலக்கட்டத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் உருவாக்கப்பட்டது. அதுதான், மதுரை பல்கலைக்கழகம்.

மற்றபடி,மீதமுள்ள 19 பல்கலைக்கழகங்களும், 1967க்குப் பிறகு, அதாவது, திராவிட அரசுகள் அமைந்த, இந்த 50 ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டவை. 1857 இல் துவக்கி வைக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகம், மற்ற மாநிலங்களில் பல்கலைக்கழகங்கள் தொடங்க முன்மாதிரியாக இருந்ததுடன் இன்றுவரை பல்வேறு துறைகளில் கோலோச்சியும் வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று 22 மாநில பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல், பொறியியல், கல்வியியல், விளையாட்டு, கால்நடை, மருத்துவம், மீன்வளம், தமிழ்வளர்ச்சி, சட்டம், வேளாண்மை மற்றும் இசை ஆகிய துறைகளின் கீழ் திறம்படச் செயல்பட்டு வருகின்றன. இப்படி தனித்தனி சிறப்பு பல்கலைக்கழகங்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு அமைந்திருக்கிறது. இந்த பல்கலைக்கழகங்களுக்காக ஆண்டுதோறும் 3 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்கிறது. அத்தகைய சீரான நிதி ஒதுக்கீடுதான் அனைத்து பல்கலைக்கழகங்களும், இந்தளவுக்கு சிறப்பாகச் செயல்படக் காரணம்.

இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில், 21 தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 100 கல்லூரிகளில், 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில், 10 தமிழ்நாட்டில் உள்ளது. தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில், 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில், 11 தமிழ்நாட்டில் உள்ளது. 100 மருத்துவ கல்வி நிறுவனங்களில், 8 தமிழ்நாட்டில் உள்ளது. 40 பல் மருத்துவ கல்வி நிறுவனங்களில், 9 தமிழ்நாட்டில் உள்ளது. 30 சட்டக்கல்லூரிகளில், 2 தமிழ்நாட்டில் உள்ளது. 30 கட்டிடக் கலைக் கல்லூரிகளில், 6 தமிழ்நாட்டில் உள்ளது. இப்படி கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம்.

அனைவருக்கும் கல்வி, அவர்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிடக் கொள்கை. வெறும் வேலைவாய்ப்பு மட்டும் தருவதை, உயர்கல்வியின் நோக்கமாக நான் கருதுவதில்லை. அந்த எண்ணங்களை உங்களிடம் பரிமாறிக் கொள்வதற்காகத் தான் இந்தக் கருத்தரங்கம்.

நாம் எப்போதும் உயர்ந்து நிற்கிறோம். இதுபோதாது, இன்னும் உயர்ந்தாக வேண்டும். உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் என்பது அகில இந்திய அளவில் 27.1 தான். ஆனால் தமிழ்நாடு, 51.4 விழுக்காடு மாணவ – மாணவிகளின் சேர்க்கை விகிதத்துடன் உயர்ந்து நிற்கிறது. அகில இந்திய அளவில் தேசிய தர வரிசை கட்டமைப்பில் முதல் ஆயிரம் இடங்களில் 164 இடங்களை அதாவது சுமார் 16 விழுக்காடு இடங்களை தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் அடைந்து சாதனை படைத்துள்ளன.

தேசிய தர வரிசையில், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் வரிசையில், 6 பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழகங்கள் வரிசையில், 8 பல்கலைக்கழகங்களும் இடம்பெற்று, நம் மாநிலத்தை உயர்கல்வியில் முதல் மாநிலமாக நிலைநிறுத்தியுள்ளன. வரும் ஆண்டுகளில் இந்நிலை மேலும் சிறப்பாக உயரும். மாணவர்களின் எண்ணிக்கைக் கூடும்போது, உயர்கல்வியின் தரம் குறைந்துவிடுகிறது என்ற வாதத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக, சென்னை மாநில கல்லூரியில் சுமார் 5000 மாணவர்கள் பயில்கின்றனர். அதேநேரத்தில் தேசிய தர வரிசையிலும், மூன்றாம் இடத்தை மாநில கல்லூரி பெற்றுள்ளது. பாடத்திட்ட மறுசீரமைப்பில், நமது அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

அறிவுசார் துறைகளை, பன்னாட்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இணையாக சீரமைத்து தமிழகத்தை அறிவுசார் மாநிலமாக நிலைநிறுத்தும் நோக்கில் உயர்கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு, நான் முதல்வன் திட்டம், மூவலூர் ராமாமிர்தம்மாள் உயர்கல்வி உறுதித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாலின பாகுபாட்டினை களைவதையும், பெண்களின் உயர்கல்வியினை ஊக்குவிப்பதையும், நமது அரசு குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதனைச் செயல்படுத்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பெயரில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை பயின்று உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களை வளர்த்தெடுக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. அதேநேரத்தில், மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும். பல்கலைக்கழகங்களின் உண்மையான நோக்கம் சமுதாயத்தில், பகுத்தறிவை கூர்மைப்படுத்துவதாக, நம்முடைய கல்வி நிலையங்கள் செயல்பட வேண்டும்.

“ஒன்றிய- மாநில அரசு உறவுகள்” குறித்து ஆராய 2007 இல் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் எனது தலைமையிலான திமுக அரசு “துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும்” மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறோம்.

ஏனென்றால், இது மாநில அரசினுடைய உரிமை தொடர்புடைய பிரச்னை; மாநிலத்தினுடைய பல்கலைக்கழகக் கல்வியுரிமை தொடர்பான பிரச்னை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை. ஆகவே, மாநில அரசின் கொள்கை முடிவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும், துணை வேந்தர்களாகிய நீங்கள் எல்லாம் செயல்பட வேண்டும். பட்டம் வாங்கும் இளைஞர்களை அல்ல, எவரோடும் போட்டியிடும் தகுதி படைத்த இளைஞர்களை தமிழ்நாட்டுக் கல்வி முறையானது உருவாக்கி இருக்கிறது.

‘நீட்’ தேர்வுக்கு எதிராக நாம் இருக்கிறோம். அந்தத் தேர்வுக்குப் பயந்து அதனை நாம் எதிர்க்கவில்லை. அது உயர்த்தும் ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக இருக்கிறது என்பதால் எதிர்க்கிறோம். படிப்புதான் தகுதியைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர தகுதியிருந்தால் தான் படிக்கவே வர வேண்டும் என்று சொல்வது, இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி.

இதனால்தான் எதிர்க்கிறோம். கல்வி உரிமையைப் போராடிப் பெற்ற சமூகம் நாம் என்கிற காரணத்தால் எதிர்க்கிறோம். போராடி சுயமரியாதையை நிலைநிறுத்திய சமூகம், இந்தத் தமிழ்ச்சமூகம் என்பதால் எதிர்க்கிறோம். கல்வியால் முன்னேறுகின்ற சமூகம் நாம் என்பதால் எதிர்க்கிறோம். பின்னால் வரக்கூடிய தீமைகளைக் கடந்தகால வரலாறுகளின் அடிப்படையில் எடை போட்டு எதிர்க்கிறோம். எந்தப் படிப்பாக இருந்தாலும், அதனை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதற்காக, நம்முடைய அணுகுமுறைகளும் திட்டமிடுதலும் இருக்க வேண்டும். மாணவர்களை கல்வியிடம் இருந்து அந்நியப்படுத்தும் அத்தனையையும் நாம் எதிர்க்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் நீட் தேர்வை மட்டுமல்ல புதிய தேசிய கல்விக் கொள்கையையும் நாம் எதிர்க்கிறோம்.

மாநில கல்விக் கொள்கை வகுக்க ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளதே, அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ்ச் சமூகத்தை கட்டமைக்கத்தான் அமைத்திருக்கிறோம்.

“To develop the scientific temper” என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அரசியல்சட்டம் வழங்கியுள்ள அடிப்படைக் கடமை. அந்தக் கடமை எனக்கும் உண்டு. பல்கலைக்கழக துணைவேந்தர்களான உங்களுக்கும் உண்டு. கல்வியாளர்களான உங்களுக்கும் உண்டு. புதிய புதிய பாடங்களை அறிமுகம் செய்யுங்கள். புதிய புதிய பட்டப்படிப்புகளைக் கொண்டு வாருங்கள். புதிய பாதைகள் அமைப்பதாக பல்கலைக்கழகங்கள் அமைய வேண்டும். இந்த ஆட்சிக் காலத்தை, உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழ வைப்பது துணைவேந்தர்களாகிய உங்களின் கடமை.புதிய அறிவியல் கருத்துகளை ஆக்கப்பூர்வமான, வளமான சிந்தனையை மாணவர்களிடையே வளர்த்து நாட்டுக்கும், எதிர்கால இளைஞர் சமுதாயத்துக்கும், பெருமை சேருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response