கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது விழா – 16 முக்கிய நூல்கள் வெளியீடு

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கும் விழாவில், 2020 ஆம் ஆண்டிற்கான விருது ம.ராசேந்திரனுக்கும், 2021 ஆம் ஆண்டிற்கான விருது க.நெடுஞ்செழியனுக்கும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் உயர்தனிச் செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள், சங்கால மக்கட் பெயர் களஞ்சியம், தமிழ்நாட்டில் சமணம் (கி.பி- 6ம் நூற்றாண்டு வரை), ஒப்பில் தொல்காப்பியம், செம்மொழி தமிழ் இலக்கிய இலக்கண மேற்கோள் அடைவு, செம்மொழி தமிழ் இலக்கண கலைச்சொற் களஞ்சியம்: எழுத்ததிகாரம், செம்மொழி தமிழ் இலக்கண கலைச்சொற் களஞ்சியம்: சொல்லதிகாரம், செம்மொழி தமிழ் இலக்கண கலைச்சொற் களஞ்சியம்: பொருளதிகாரம், தமிழர் பாரம்பரிய நெல் வகைச் சொல்லகராதி, உ.வே.சா. இலக்கிய அரும்பத அகராதியும் சங்கநூற் சொல்லடைவும், உ.வே.சா. நாட்குறிப்பு உள்ளிட்ட 16 நூல்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கிப் பேசியதாவது…….

இன்று ஆகஸ்ட் 22. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்த நாள், சிங்காரச் சென்னையினுடைய 383 ஆம் ஆண்டினுடைய பிறந்தநாள். 22.08.1639 – என்பது சென்னை உருவாக்கப்பட்ட நாள். சென்னையின் வணக்கத்திற்குரிய மேயராக நான் இருந்தபொழுதுதான் மதராஸ் என்ற பெயரை சென்னையாக, அப்போதைய முதல்வராக இருந்த நம்முடைய தலைவர் கலைஞர் மாற்றி, இன்று ஊரெங்கும் ‘நம்ம சென்னை, நம்ம பெருமை’ என்று உணர்வு பெருக்குடன் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது.

தமிழர்கள் வாழும் இந்தத் தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அரசுதான் நம்முடைய திமுக அரசு அண்ணா தலைமையிலே என்பதும் வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. அதேபோல் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்தத் தலைநகருக்கு சென்னை என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரைச் சூட்டியதும் திமுக அரசுதான்.

இதேபோல், மூவாயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழுக்கு செம்மொழி என்ற தகுதியைப் பெற்றுத் தந்ததும் திமுக அரசுதான்.

“கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் அறக்கட்டளை” வாயிலாக ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்கு ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது இந்தியாவிலேயே மிக உயரிய அளவில் ரூ.10 இலட்சம் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த நினைவுப் பரிசும் அடங்கியதாகும்.

இன்றைய தினம் 2020 ஆம் ஆண்டுக்கான விருது முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரனுக்கும், 2021 ஆம் ஆண்டுக்கான விருது பேராசிரியர் க.நெடுஞ்செழியனுக்கும், 2022 ஆம் ஆண்டுக்கான விருது பிரெஞ்சு நாட்டின் அறிஞர் ழான் லூயிக் செவ்வியாருக்கும் வழங்கப்படுகிறது.

விருது பெற்ற மூவரையும் தமிழ்நாடு அரசின் சார்பில் நான் நெஞ்சாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். கலைஞருடைய கனவை நிறைவேற்றுவதற்காகத்தான் நான் முதலமைச்சர் பொறுப்பில் நாளும் உழைத்து வருகிறேன். அண்மையில் கூட, இந்திய பிரதமரை நான் வரவேற்றபோது செம்மொழி நிறுவனம் வெளியிட்ட தொல்காப்பியம், ஆங்கில மொழிபெயர்ப்பை அன்பளிப்பாகத் தந்தேன்.

தமிழ்மொழிக்கும், வளம் சேர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களை செம்மொழி நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. செம்மொழி நிறுவனம் முன்வைத்துள்ள இலக்குகளை அடைய தமிழ்நாடு அரசு எப்போதும் துணைநிற்கும்.

புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் செவ்வியல் தமிழ் இருக்கைகள் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலமாக அமைக்கப்படும் என்று அப்போது நான் சொன்னேன். அதற்குரிய பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக,
1. ரீயூனியன் – டி லா ரீயூனியன் பல்கலைக்கழகம் (ரீயூனியன் தீவு பல்கலைக்கழகம்)
2. இந்தோனேசியா – சுமத்ரா உத்தாரா பல்கலைக்கழகம்
3. கம்போடியா – கெமர் மொழிகள் ஆய்வு மையம்
4. வியட்நாம் – மொழிகள் மற்றும் பன்னாட்டு ஆய்வியல் பல்கலைக்கழகம்
5. தாய்லாந்து – சுலாலோங்கோர்ன் பல்கலைக்கழகம் ஆகிய தெற்காசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களில் செவ்வியல் தமிழ் இருக்கைகள் விரைவில் ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் (பாமஉ), அரவிந்த் ரமேஷ் (சமஉ), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Response