தமிழர் மரபு வேளாண்மை மாநாடு – தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கைகள்

தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கை (Organic Framing Policy) அறிவிக்கக் கோரி தமிழக உழவர் முன்னணி நடத்திய “தமிழர் மரபு வேளாண்மை மாநாடு” – 30.07.2022 மாலை பெண்ணாடத்தில் நடைபெற்றது.

செந்தமிழ் மரபுவழி வேளாண்மை நடுவம் ஒருங்கிணைப்பாளர் கரும்பு கண்ணதாசன், மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். தமிழக உழவர் முன்னணித் தலைவர் சி.ஆறுமுகம் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். உழவர் போராளி தூருவாசன் மற்றும் தில்லி உழவர் போராட்ட ஈகியர் படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் கி.வெங்கட்ராமன், மாநாட்டின் நோக்கங்களை விளக்கி உரையாற்றினார். சுயாட்சி இந்தியா தமிழ்நாடு தலைவர் கே.பாலகிருஷ்ணன், தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாமயன். தமிழக உழவர் முன்னணித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.முருகன், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்க ஒருங்கிணைப்பாளர் இரமேசு கருப்பையா ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

சுயாட்சி இந்தியா கட்சியின் அனைத்திந்தியத் தலைவரும், தில்லி உழவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான முனைவர் யோகேந்திர யாதவ் காணொலி வாழ்த்துச் செய்தி மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. வேளாண் பொருளியல் ஆய்வறிஞர் அரியானாவைச் சேர்ந்த முனைவர் தேவேந்திர் சர்மாவின் வாழ்த்துச் செய்தியை கி.வெங்கட்ராமன் சுருக்கமாகக் கூறினார்.

இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் செயல்படும் நீடித்த வேளாண்மை மையத்தின் செயல் இயக்குநரும், தெலுங்கானா – ஆந்திரா மாநிலங்களில் ஏறத்தாழ 35 இலட்சம் ஏக்கர் பரப்பில் சிறு விவசாயிகளை ஒருங்கிணைத்து இயற்கை வேளாண்மை செய்து வருபவருமான முனைவர் ஜி.பி. இராமாஞ்சநேயலுவுக்கு, நீடித்த வேளாண்மைக்கும் உழவர்களின் வருமானத்தை அதிகரிக்கவும் அவர் ஆற்றியுள்ள பணியைப் பாராட்டி காந்திய பொருளாதார அறிஞர் “ஜே.சி. குமரப்பா நினைவு விருது” வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. முனைவர் இராமாஞ்சேயலு மாநாட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், மாநாட்டு நிறைவுரை ஆற்றினார்.

முன்னதாக, திரைப்படப் பாடலாசிரியர் கவிபாஸ்கரின் கவிவீச்சும், பெண்ணாடம் திருவள்ளுவர் கலைக்குழுவினரின் பறை இசையும் நடைபெற்றன.

தமிழக உழவர் முன்னணித் துணைத் தலைவர் மு.தமிழ்மணி, செந்தமிழ் மரபு வேளாண்மை நடுவம் கவிஞர் சிலம்புச்செல்வி, தாளாண்மை உழவர் இயக்க க.வே.நடராசன், கோட்டேரி சிவக்குமார், க.சரவணன், ஈரோடு மாவீரன், பேராசிரியர் சௌ.காமராசு, சீர்காழி பொற்கொடி சித்ரா ஆகியோரும் உரையாற்றினர்.

காரைக்கால் பாஸ்கரின் மரபு விதைக் களஞ்சியம், தமிழர் மரபு உணவுத் திருவிழா, அடுப்பில்லா சமையல் செயல் விளக்கம், இயற்கை எரிவளி (பயோ கேஸ்) செயல் விளக்கம் ஆகியவை இம்மாநாட்டில் இடம்பெற்றன.

தமிழக உழவர் முன்னணி தி.வேல்முருகன் வரவேற்புரையாற்ற, செ.கணேசன் நன்றியுரையாற்றினார். மாநாட்டு நிகழ்ச்சிகளை மா.மணிமாறன், சி.பிரகாசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மாநாட்டில் தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், வேளாண் விளை பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி குறைந்தபட்ச இலாப விலையை அடிப்படை விலையாக அறிவித்து சட்டமியற்ற வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தியும், தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் உள்ளதைப் பின்பற்றி தமிழ்நாட்டில் உழவர்களுக்கு ஏக்கருக்கு 12,000 ரூபாய் வீதம் நேரடி வருவாய்த் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உழவர்களும், இயற்கை வேளாண்மை ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்றனர்.

Leave a Response