கொரோனா முடிவல்ல தொடக்கம் – சூழல்நாள் உரையில் பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் உலக சுற்றுச்சூழல்தின உரையரங்கு 05.06.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்வுரையரங்கு தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த.யுகேஸ் தலைமையில் ஆவரங்கால் கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றது. ஆசிரியர் சபா.குகதாசன் வரவேற்புரை நிகழ்த்த யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை விரிவுரையாளர் ச.ரவி, தமிழ்த்தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் சுற்றுச்சூழல் தொடர்பாகச் சிறப்புரையை ஆற்றினார்கள்.

அப்போது பொ.ஐங்கரநேசன் பேசியதாவது…..

கொரோனா நோய் இதுவரையில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மனித உயிர்களைப் பலி எடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த உலகையும் முடக்கிப் பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. கொரோனா ஓர் முடிவல்ல. இதைவிடக் கொடிய நோய்களை எல்லாம் மனுக்குலம் அனுபவிக்கப்போகிறது. பூமியை நாம் சூடுபடுத்துவதால் கொரோனாவைவிடக் கொடும் நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாம் எரிபொருட்களை அளவுகணக்கின்றி எரித்துத்தள்ளுகிறோம். இதனால் வெளியேறும் கரிக்காற்று நாளுக்கு நாள் பூமியைச் சூடுபடுத்தி வருகிறது. இவ்வெப்பம் காரணமாகத் துருவப்பகுதிகளில் உறைந்திருக்கும் பனி உருகிவழியத் தொடங்கியுள்ளது. பனிப்பாளங்களின் கீழே மனிதன் பூமியில் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய வைரசுக்கள் இப்போதும் உறைநிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். பனி உருகுவதால் இவ்வைரசுக்கள் வெளியேறி மனிதர்களைத் தாக்கும் என்று அஞ்சப்படுகிறது.

காட்டு விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குத் தாவித் திரிபடைந்த வைரசுக்களே கொரோனாக் கிருமிகள். இவை மனிதர்களுக்குப் புதியவை என்பதாலேயே இவற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களிடம் இருக்கவில்லை. இதனாலேயே கொரோனா பெருங்கொள்ளை நோயாக உருவெடுத்து உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. உறைபனிகளின் கீழிருந்து வெளிப்படும் வைரசுக்களும் மனிதர்களுக்குப் புதியவை என்பதால் இவை தொற்றும்போதும் புதுப்புதுக் கொள்ளை நோய்களாகவே உருவெடுக்கும்.

எமது பிரபஞ்சத்தில் பில்லியன் கணக்கான வெள்ளுடுத்தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு வெள்ளுடுத்தொகுதியிலும் பில்லியன் கணக்கான கிரகங்கள் உள்ளன. ஆனால், பூமிக் கிரகம் ஒன்றே ஒன்றுதான். உயிரினங்கள் வாழுகின்ற வேறு கிரகங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனால், நாம் பூமியின் அத்தனை வளங்களையும் சூறையாடி வருகின்றோம். இருக்கின்ற ஒரேயொரு பூமியை நாம் பாதுகாத்தாலே நோய்நொடியின்றி நாமும் வாழ்ந்து ஏனைய உயிரினங்களும் இந்தப் பூமியில் வாழ முடியும்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response