ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21 ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனை ‘அக்னி நட்சத்திரம்’ என்று கூறுகிறார்கள்.
இந்தக் காலம் வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கும், தென்மேற்குப் பருவமழைக் காலத்திற்கும் இடைப்பட்ட காலமாகும். பஞ்சாங்கத்தின் படி 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கத்தைவிட இந்த நாட்களில், சூரியன் அதிக வெப்பத்தைக் கொடுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். இந்தக் காலப்பகுதியை கத்திரி வெயில் என்றும் அழைப்பார்கள்.
அந்த வகையில், இன்று (புதன்கிழமை) ‘அக்னி நட்சத்திரம்’ என்ற கத்திரி வெயில் தொடங்கி வருகிற 28 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆனால், தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, கடந்த (ஏப்ரல்) மாதம் முதல் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது.
இதுகுறித்து வானிலை நிபுணர்கள் கூறும்போது, ‘கத்திரி வெயில் இன்று தொடங்கி வருகிற 28 ஆம் தேதி வரை நீடிக்கும். இந்தக் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, முதல் 7 நாட்களில் மெதுவாக வெப்பத்தின் தாக்கம் ஏறுமுகமாக இருக்கும். அடுத்த 7 தினங்கள் அதிக அளவில் தெரியும். கடைசி 7 தினங்களில் படிப்படியாகக் குறையும் என்பதை நாம் அனுபவித்து உணரலாம்’ என்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, ‘கத்திரி வெயில் காலத்தில், பகல் 10 மணியில் இருந்து மாலை 3 மணி வரை தேவை இல்லாமல் குழந்தைகள் மற்றும் பொதுமக்களும் வெளியே செல்வதைத் தவிர்த்து, வீட்டிலேயே இருப்பது நல்லது. கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, அதிக காரம் இல்லாத உணவுகளைச் சாப்பிடுவதுடன், தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், நுங்கு, இளநீர், வெள்ளரிக்காய், மோர் போன்ற குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது நல்லது’ என்கின்றனர்.