மே 18 அன்று முள்ளிவாய்க்கால் வாருங்கள் – போராடும் சிங்களர்களுக்கு ஐங்கரநேசன் அழைப்பு

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்
மே18 இல் முள்ளிவாய்க்கால் வரவேண்டும் என
மேதினக்கூட்டத்தில் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து ராஜபக்சாக்களை வெளியேறக்கோரி கோட்டா கோ கம என்று காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் தமிழில் தேசியகீதம் பாடுவதாலோ, தமிழ் இசைக்கருவியான பறைகளை முழங்குவதாலோ போராட்டக்காரர்கள் தமிழ்மக்களின் மனங்களை வெல்லமுடியாது. பண்டாரநாயக்காவின் சிலையில் கண்களைக் கறுப்புத் துணியினால் கட்டுவதால் புரையோடிப்போயுள்ள பேரினவாதம் அற்றுப்போய்விடும் என்று தமிழ்மக்கள் நம்பத்தயாராக இல்லை. இந்த மாற்றங்கள் இதயசுத்தியானது என்பதைத் தமிழ்மக்கள் நம்புவதற்கு நீங்கள் இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டும். மே18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வாருங்கள். மாவீரர்களுக்கு விளக்கேற்ற நாம் கோரவில்லை. போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அரசாங்கம் இன்றுவரை தடைவிதித்து வரும் நிலையில் மே18 அன்று எங்களுடன் சேர்ந்து அஞ்சலிக்க வாருங்கள் என்றுதான் அழைக்கிறோம் என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் செம்பசுமை மேதினப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (01.05.2022) அன்று நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரை ஆற்றும்போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிங்கள மக்களைப் போன்றே தமிழ்மக்களும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அரசாங்கத்துக்கு எதிராகத் தென்னிலங்கையில் இடம்பெற்றுவரும் போராட்டங்களில் இன்றுவரையில் தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக ஒன்றிக்கவில்லை. நாடுதழுவிய போராட்டங்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றபோதும் தமிழ்மக்கள் பார்வையாளர்களாக மாத்திரமே இருந்து வருகிறார்கள். இதற்கான காரணங்களைப் போராட்டக்காரர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

போராட்டக்காரர்களின் இலக்கு ராஜபக்சாக்களை வீட்டுக்கு அனுப்புவதாக மாத்திரமே இருக்கிறது. இதற்கான காரணங்களாக ராஜபக்சாக்களின் குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என்பனவற்றையே முன்வைக்கிறார்கள். ஆனால், இவை எல்லாவற்றையும்விட இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சீர்குலைவுகளுக்குப் பின்னால் சிங்கள பௌத்தப் பேரினவாதமே உள்ளது. இதனைப்பற்றிப் போராட்டக்காரர்கள் இன்றுவரை பேச முன்வரவில்லை.

ராஜபக்சாக்களை வீட்டுக்கு அனுப்புவதால் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கப்போவதில்லை. தீர்வைப் போராட்டக்காரர்களிடம் இருந்து நாம் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால், மாறி மாறி ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இனவாத ஒடுக்குமுறைகளும் அதனால் மூண்டபோருமே இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணம் என்ற உண்மையை வெளிப்படையாக நீங்கள் உரத்த குரலில் பேசவேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்போதுதான் உங்களோடு சேர்ந்து போராடத் தமிழ்மக்கள் முன்வருவார்கள்

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Leave a Response