இளையராஜா பாவம் – திருமாவளவன் இரக்கம்

சென்னை எழும்பூரில் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசியதாவது,

அரசியல் ஆதாயங்களுக்காக இதுவரை எந்த முடிவையும் எடுத்ததில்லை. விளிம்பு நிலை மக்களுக்குப் பாடுபட வேண்டும் என்ற பொறுப்பு உணர்வுடன் மட்டுமே முடிவுகளை எடுத்து வருகிறேன். இதைத் தொடர வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பேச எழும்போதெல்லாம் பதட்டமாகத் தான் இருப்போம். முக்கியக் கட்சிகள் பேசி முடித்தபின் தான் நான் பேச வேண்டிய நிலை வரும். மற்ற உறுப்பினர்கள் பேசுவதை உள்வாங்கிக் கொண்டு அவர்கள் பேசாததைப் பேசுவேன்.

கர்நாடகாவில் ஹிஜாப்க்கு எதிராக சங் பரிவார் கும்பல் தூண்டிவிட்டு மாணவ சமூகத்தைப் பிளவு படுத்தும் செயலில் ஈடுபடுகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிராகக் குரல் எழும் போதும், அதை எதிர்த்து நிற்கும் கடமை இஸ்லாமியர்கள் அல்லாத சமூகத்திற்கும் இருக்கிறது.

இஸ்லாமிய சமூகம் வீதிக்கு வர வேண்டும், கோபப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு எதிராகப் பேச வேண்டியவர்கள், வீதிக்கு வர வேண்டியவர்கள், வீறு கொண்டு எதிர்வினை ஆற்ற வேண்டியவர்கள் பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக சக்திகள் தான். இவர்களை அம்பலப்படுத்த வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.

இஸ்லாமியர்கள் அமைதி காக்க வேண்டும். இஸ்லாமியர்கள் ஆத்திரப்பட்டு விடக்கூடாது, வீதிக்கு வந்து விடக்கூடாது. எதிர்வினை என்ற பெயரில் அவர்கள் விரும்பும் இருதுருவ அணி புரட்சிக்கு வழி வகுக்கக் கூடாது. இஸ்லாமியர் அல்லாத சில ஜனநாயக சக்திகளுக்கு இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

சங்பரிவார் கும்பலை எதிர்ப்பவர்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கிறார்கள். இதை எப்படிக் கையாள்வது என காங்கிரசு போன்ற பெரிய கட்சிகளுக்கே அச்சம் இருக்கிறது. சங்பரிவார் கும்பலின் உண்மையான அரசியலை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு காங்கிரசு, திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் கடமையாக உள்ளது.

அம்பேத்கர் சிலைக்கு மாலை போடும் போதாவது, அவர்களுக்கு ஞானம் கிடைக்கிறதா எனப் பார்க்கலாம் என நினைத்தேன். ஒரு ஜனநாயக அணுகுமுறையைக் கையாள வேண்டும் என நினைத்தேன். பாஜக, ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் அம்பேத்கர் சிலையைத் திறந்து மாலை போடுங்கள். வேண்டுமென வீம்புக்கு வம்பு இழுக்கிறார்கள். கவனம் தன் பக்கம் திரும்பவேண்டும் என வன்முறைகளைத் திட்டமிட்டுத் தூண்டக்கூடிய சக்திகள்தான் பாஜக.

சமூகத்தில் யார் மக்களோடு நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களைச் சந்திப்பது தான் அவர்கள் நோக்கம். ஆர்எஸ்எஸ் காரர்கள் அப்படி இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன். அம்பேத்கர் மோடி சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்களும் என்ற புத்தகத்தைக் கொடுத்து அணிந்துரை கேட்டிருக்கிறார்கள். அவரும் இரண்டு பக்கம் எழுதிக் கொடுத்திருக்கிறார். அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியைப் பாராட்டி இருப்பார் என இசைஞானி சொல்லியிருக்கிறார்.

மோடியை எப்படி அவர் விமர்சித்து இருப்பார் எனச் சொல்ல முடியாது. அவரால் மோடியைச் சகித்திருக்க முடியாது. அவர் இருந்திருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அவர் இன்னும் 5 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால், இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கும்; திசை வழியே மாறியிருக்கும். அவர் மறைந்த பிறகு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

சனாதன கும்பலின் முதல் எதிரி அம்பேத்கர். ஆர்.எஸ்.எஸ் இன் அரசியலை இறுதி மூச்சுவரை மூர்க்கமாக எதிர்த்தார் அம்பேத்கர்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் 13 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா போன்றவர்களைக் குறி வைப்பதே அவர்களின் முக்கிய நோக்கம். இளையராஜா பாவம் என்று இரக்கம் காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டைக் குறிவைத்து விட்டார்கள். இஸ்லாமிய வெறுப்பைத் தீவிரப்படுத்துகிறார்கள். கிருத்துவ எதிர்ப்பையும் கையில் எடுக்கிறார்கள்.விடுதலைச் சிறுத்தைகளைச் சீண்டினால் கவனம் கிடைக்கும் என நினைக்கிறார்கள். பாஜகவா? விடுதலைச் சிறுத்தைகளா? என்ற அரசியலை எடுக்க எந்தத் தயக்கமும் எங்களுக்கு இல்லை. இது சமூக நீதி மண், இங்கு காலூன்ற அனுமதிக்கக் கூடாது என்ற கவலை தான் இருக்கிறது.

கலைஞர் இல்லை, ஜெயலலிதா இல்லை என்று அவர்கள் தப்புக்கணக்குப் போட்டார்கள். ஜெயலலிதா கலைஞர் என இருவருக்குமான வலிமையுடன் பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும் வலிமை மு.க.ஸ்டாலினுக்கு இருப்பதை காட்டிக் கொண்டிருக்கிறார்.

அதே போல் உங்கள் வால் ஒட்ட நறுக்கப்படும் என எச்சரிக்கை கொடுக்கும் வகையில் சட்டமன்றத்தில் அவர் பேசியிருக்கிறார். இதனால் தான் சமூக நீதி அரசு என்று கூறுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response