டீ காபிக்கு பதில் மோர் அருந்துங்கள் இவ்வளவு நன்மைகள் உண்டு

கிராமத்து மண் வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் |மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது.

கலோரிகள் நிறைந்த செயற்கைபான பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த, மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து.

மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்தி வருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும்.

கால்சியம் ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது.

தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால் நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள் மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறும்.

வேனிற் காலம் எனும் ரதத்தை அழகாக இழுத்துச் செல்லும் சாரதி மோர். வெயில் காலத்தில் உண்டாகும் சிறுநீர் எரிச்சல், நீர் சுருக்கு போன்ற உபாதைகள் வராமல் தடுக்க மோர் குடிப்பது அவசியம்.

மோர் அருந்துவதால் குடற்புண், கண்ணெரிச்சல், கைகால் எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளை மோரில் கலந்து குடிப்பதைத் தவிர்த்து, மண் பானைகளில் குளிரூட்டப்பட்ட மோரைப் பயன்படுத்தலாம். மோரின் குளுமையோடு பானையின் குளுமையும் சேர்வதால் வெப்பத்தைக் குறைக்கும் அற்புதமான பானமாகும்.

அலுவலகத்துக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர். புட்டிகளில் நீருக்குப் பதிலாக நீர்மோரையே தாகம் தணிக்க எடுத்துச் செல்லலாம். மாலை வேளைகளில் டீ காபிக்குப் பதிலாகச் சீரக மோரைப் பருகலாம். வெயில் காலங்களில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்வதில் மோருக்கு முக்கியப் பங்குண்டு. தாகத்தை நிவர்த்தி செய்து, சிறுநீர் பெருக்கியாக மோர் செயல்படுகிறது.

– டாக்டர் வி. விக்ரம் குமார்,சித்த மருத்துவர்

நன்றி – ஹெல்த் அண்ட் பியூட்டி இதழ்

Leave a Response