யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் திரண்ட பல்லாயிரம் தமிழ்மக்கள் – சிங்கள அரசு கடும் அதிர்ச்சி

தமிழீழத்தில் தமிழ்மக்களின் அரசியல் தீர்வு 13 ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதி முயற்சிக்கு எதிராக நேற்று (ஞாயிற்றுக்கிழமை – 30-01-2022) முற்பகல் 10 மணிக்கு நல்லூரில் மாபெரும் பேரணி இடம்பெற்றது.

முற்பகல் 10 மணிக்கு நல்லூர்க் கந்தன் ஆலய வீதியில் ஆரம்பமான மாபெரும் பேரணி நல்லூர் கிட்டு பூங்கா வரை சென்று அங்கு பொதுக் கூட்டமும் நடைபெற்றது.

இதுதொடர்பாக, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில்….

இலங்கைத் தீவிலிருந்து பிரித்தானியர் வெளியேறிய 1948 தொடக்கம் இன்று வரை நடைமுறையில் இருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் கொண்ட ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்களானவை தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைக்கும் நிலப்பறிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், பெளத்த மயமாக்கல்கள் உள்ளிட்ட கட்டமைப்புசார் இனவழிப்புக்கும் காரணமாக அமைந்து வந்தன.

இதன் காரணமாகவே தமிழர்கள் நாம் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டி ஆட்சியைக் கோரிப் போராடி வந்துள்ளோம்.

இப் போராட்டப் பயணத்தின் இடையில் தமிழ்மக்களின் சம்மதம் இன்றி 1987ஆம் ஆண்டு ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்ற பெயரில் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டது. 34 ஆண்டுகள் கடந்தும் அதன் மூலம் தமிழ்மக்களுக்கு எந்த அதிகாரமும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் 1978 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டு 44 வருடங்களின் பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்போவதாகக் கூறி இலங்கைக்கான 4 ஆவது ஒற்றையாட்சி அரசியல் யாப்பு விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்நிலையில் கடந்த 34 வருடங்களுக்கு முன்னர் தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்க்கட்சிகளால் கோரப்பட்டுள்ளது. இச் செயற்பாடு தமிழ்மக்களது அரசியல் அபிலாசைகளை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் சதிமுயற்சியாகும். இச் சதிமுயற்சியை முறியடிக்கவும், தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணயமுள்ள சமஸ்டித் தீர்வை வலியுறுத்தியும் மாபெரும் பேரணி இடம்பெறுகின்றது.

இப் பேரணிக்கு அனைத்துத் தமிழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையொட்டி நேற்று நடைபெற்ற பேரணியில், பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஒற்றையாட்சி முறைக்கு எதிராக எழுப்பிய முழக்கங்களால் சிங்கள அரசு அதிர்ச்சி அடைந்திருக்கிறது.

Leave a Response