கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்பது சட்டவிரோதம் – ததேபே போராட்டம்

கட்டாயத் தடுப்பூசி சட்ட விரோதம்! விரும்புவோருக்கு மட்டுமே தடுப்பூசி போடுக!தடுப்பூசித் திணிப்புக்கெதிராகப்
புதுச்சேரியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம் நடத்துகிறது.

அது தொடர்பாக அவ்வியக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் விரும்பியோருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், அதைக் கட்டாயமாக்கி 100% விழுக்காடு என இயற்றைக்கு மாறான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கட்டாயப்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப் போவதாக இந்தியத் துணைநிலை ஆளுநரும், நலவாழ்வு(சுகாதார)த் துறை இயக்குநரும் அறிவித்திருப்பது இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது.

கடந்த 29.11.2021 அன்று இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தடுப்பூசி கட்டாயமாக்கபடவில்லை என தெரிவித்துள்ளது. கடந்த 01.12.2021 அன்று தில்லியில் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா, “ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார். இந்திய ஒன்றிய நலவாழ்வுத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், “ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒருபோதும் அரசு பேசவில்லை” என்று கூறியுள்ளார்.

மேகாலயா உயர் நீதிமன்றம் Registrar General, High Court of Meghalaya v. State of Meghalaya வழக்கில் (PIL. 6/2021) கடந்த 23.06.2021 அன்று தீர்ப்பளித்து, தடுப்பூசியைக் கட்டாயப்படுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயல் எனக் கூறியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கும், செலுத்திக் கொள்ளாதவருக்கும் இடையில் பாகுபாடு காட்டும் அரசாணைகளை கவுகாத்தி உயர் நீதிமன்றம் (வழக்கு எண். PIL 13/2021, தீர்ப்பு நாள் – 19.07.2021) நிறுத்தி வைத்து ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில், இவற்றுக்கு நேர்மாறாக புதுச்சேரியில் தடுப்பூசியை அனைவருக்கும் கட்டாயப்படுத்தும் அறிவிப்பு, ஆங்கில அலோபதி மருத்துவம் மட்டுமின்றி, சித்தா – ஆயுர்வேதா – யுனானி எனப் பல்வேறு மருத்துவ முறைகளை மேற்கொண்டு வரும் மக்களை ஒற்றை அலோபதி மருத்துவத்தின்கீழ் கொண்டு செல்லும் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.

எனவே, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் நலவாழ்வுத்துறை இயக்குநர் ஆகியோரின் சட்டவிரோதமான கட்டாயத் தடுப்பூசி அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், அரசின் தடுப்பூசி விழிப்புணர்வால் உந்தப்பட்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதிப்பைச் சந்தித்துள்ளோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனக் கோரியும் வரும் 25.12.2021 (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு – புதுச்சேரி இராசா திரையரங்கம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் மட்டுமின்றி, பல்வேறு தோழமை அமைப்பின் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்திப் பேசுகின்றனர்.

இப்போராட்டத்தில், தமிழ் மக்களும், சனநாயகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்க விரும்புவோரும் பெருந்திரளாகப் பங்கேற்க வருமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் அன்புரிமையுடன் அழைக்கிறது!

புதுச்சேரி அரசே,

1. தடுப்பூசியைக் கட்டாயமாக்கி சட்டவிரோதமாகத் திணிக்காதே!

2. விரும்புவோருக்கு மட்டுமே தடுப்பூசியை செலுத்த ஆணையிடு!

3. தடுப்பூசி செலுத்தாதோருக்கு எவ்வித உரிமைகளையும் மறுக்காதே!

4. தடுப்பூசி போட்ட பின்பு உயிரிழந்தோர் மற்றும் உடல்நலமிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடு!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response